ஷா ஆலாம் , அக் 23 : நாளை, வெள்ளிக்கிழமை அன்று சிலாங்கூரில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வழக்கம்போல் இயங்குமென சிலாங்கூர் மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
தற்போதைய காற்றின் தரம் திருப்திகரமாக இல்லாத நிலையிலும், பள்ளியில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் வழக்கம் போல் தொடரும் என்பதை இந்த அதிகாரப்பூர்வ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் தங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தங்களின் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க அனுமதிக்கப்படுகிறது.
ஆனால் அது குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.
தற்போதைய காற்றின் தரத்தைக் கருத்தில் கொண்டு, வகுப்பறைக்கு வெளியே மேற்கொள்ளப்படும் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் (விளையாட்டு மற்றும் இதர செயல்பாடுகள்) தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை நிலவரப்படி, கிள்ளான் மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய பகுதிகள் சிலாங்கூரில் மிக அதிகபட்சமாக 155 என்ற காற்றின் தரக் குறியீட்டைப் பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






