ஜொகூர்,சிலாங்கூர், கோலாலம்பூரில் நீடிக்கும் புகைமூட்டப் பாதிப்பு: பாசிர் கூடாங்கில் கடும் மாசுபாடு

14 அக்டோபர் 2026, 2:50 AM
ஜொகூர்,சிலாங்கூர், கோலாலம்பூரில் நீடிக்கும் புகைமூட்டப் பாதிப்பு: பாசிர் கூடாங்கில் கடும் மாசுபாடு
ஜொகூர்,சிலாங்கூர், கோலாலம்பூரில் நீடிக்கும் புகைமூட்டப் பாதிப்பு: பாசிர் கூடாங்கில் கடும் மாசுபாடு

கோலாலம்பூர், அக் 14: தீபகற்ப மலேசியாவின் மத்திய மற்றும் தென் பகுதிகளில் புகைமூட்டம் தீவிரமடைந்துள்ளதால், இன்று காலை நாடு முழுவதும் காற்றின் தரம் மேலும் மோசமடைந்தது.

நாட்டின் 27 கண்காணிப்பு நிலையங்கள் ஆரோக்கியமற்ற காற்று மாசு குறியீட்டு (API) அளவை பதிவு செய்துள்ளன.

சுற்றுச்சூழல் துறையின் காலை 8.54 மணி வரையிலான கண்காணிப்பு தரவுகளின்படி, நாட்டின் 68 நிலையங்களில் 27 நிலையங்கள் ஆரோக்கியமற்ற பிரிவில் பதிவாகியுள்ளன.

இது நேற்று காலை பதிவான 20 நிலையங்களை விடக் கணிசமான உயர்வாகும். எஞ்சிய நிலையங்களில் 40 நிலையங்கள் மிதமான காற்றின் தரத்தையும், ஒரே ஒரு நிலையம் மட்டுமே நல்ல காற்றின் தரத்தையும் பதிவு செய்துள்ளன.

ஜொகூர் மாநிலத்தின் பாசிர் கூடாங் பகுதியில் நாட்டின் மிக உயர்ந்த அளவாக 177 புள்ளிகள் பதிவாகியுள்ளதுடன், நெகிரி செம்பிலானின் நீலாய் பகுதியில் காற்று மாசு அளவு ஒரே இரவில் 174 -ஆகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான் மற்றும் ஜோஹான் செத்தியா ஆகிய பகுதிகள் 173 என்ற அளவில் சமமாகப் பதிவாகியுள்ளதுடன் பந்திங், ஷா ஆலாம், பெட்டாலிங் ஜெயா ஆகிய இடங்களும் ஆரோக்கியமற்ற பிரிவில் உள்ளன.

கோலாலம்பூரின் செராஸ் மற்றும் பத்து மூடா முறையே 168 மற்றும் 164 புள்ளிகளைப் பதிவு செய்துள்ள வேளையில், நாட்டின் நிர்வாக மையமான புத்ராஜெயா 165 புள்ளிகளுடன் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.

இது பள்ளிகள் மூடப்படுவதை மதிப்பிடுவதற்கான 150 புள்ளி வரம்பைத் தாண்டியுள்ளது.

தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களிலும் புகைமாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜொகூரில் கோட்டா திங்கி, லார்க்கின், பெங்கேராங் உட்பட மொத்தம் ஏழு நிலையங்கள் ஆரோக்கியமற்ற பிரிவில் உள்ளன.

மலாக்காவின் புக்கிட் ரம்பாய், மலாக்கா மாநகரம், அலோர் காஜா ஆகிய மூன்று கண்காணிப்பு நிலையங்களும் ஒரே இரவில் மோசமடைந்துள்ளன.

கிழக்குக் கரையில் திரெங்கானுவின் தொழில்மயப் பகுதிகளான கெமாமான், பாக்கா மற்றும் பகாங்கின் குவாந்தான், ரோம்பின் ஆகிய இடங்களிலும் புகைமாசு அதிகரித்துள்ளதுடன் சரவாக்கின் செரியன் பகுதி 153 புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது.

காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் பல மாநிலங்களில் இன்று பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கின்றன.

ஜொகூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளும் இன்று மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபத்லினா சிடெக் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தவிர சிலாங்கூர், பகாங், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள 9 மாவட்ட கல்வி அலுவலகங்களின் கீழ் உள்ள பள்ளிகளும் மூட உத்தரவிடப்பட்டன.

வெளிப்புறங்களுக்குச் செல்லும் போது பொதுமக்கள், அதிக ஆபத்துள்ள குழுவினர் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு முகக்கவசங்களை அணியுமாறும், சுற்றுச்சூழல் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளங்கள் மூலம் நிகழ்நேர API நிலவரத்தைக் கண்காணிக்குமாறும் சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.