ஜோகூர் பாரு, அக் 28 : ஜோகூர் - சிங்கப்பூர், சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கட்டமைப்பின் மூலம் பிராந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஆற்றல் மிக்கதாகவும், போட்டித் தன்மை கொண்டதாகவும் மாற்றும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளன.
இது ஜோகூர் மாநிலத்தைப் பிராந்தியத்தின் முதலீட்டு இடமாக மாற்றும் என்று ஜோகூர் மந்திரி புசார் மாண்புமிகு டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த JS-SEZ கட்டமைப்பு, முதலீட்டு ஒப்புதல்களை விரைவுபடுத்தவும், வர்த்தகத் தடைகளைக் குறைக்கவும், உலகளாவிய சந்தை அணுகலை விரிவுபடுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
அண்டை நாடுகளான இவ்விரு பொருளாதாரங்களின் வலிமைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், ஒன்றையொன்று நிறைவுசெய்யும் மற்றும் சர்வதேச அளவில் போட்டித்தன்மை கொண்ட முதலீட்டுச் சூழல் உருவாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, நேற்று ஜோகூர் பாருவின் சௌஜானாவில் உள்ள மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சிங்கப்பூர் தேசிய வளர்ச்சித்துறை அமைச்சர் சீ ஹோங் டாட் மற்றும் அவரது குழுவினருடன் சந்திப்பு நடத்தப்பட்டது.
இரு தரப்புக்கும் இடையிலான நெருங்கிய உறவையும் பரஸ்பர மரியாதையையும் பிரதிபலிப்பதாக இது அமைந்தது.




