ஈப்போ, ஜனவரி 5 — பேராக் மாநில அரசு, மின்னணு சிகரெட் அல்லது வேப் தயாரிப்புகளின் விற்பனையைத் தடை செய்ய எடுத்த முடிவைத் தொடர்ந்து, இந்த ஆண்டு அக்டோபர் வரை தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேப் வியாபாரிகளுக்கு அவகாசம் வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட வணிகர்கள் தடையை முழுமையாக அமல்படுத்துவதற்குத் தயாராவதற்கு ஒரு இடைக்கால நடவடிக்கையாக இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் மாநில மனிதவளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் தலைவர் டத்தோ சிவநேசன் கூறினார்.
"சில வணிகர்கள் இன்னும் காலாவதியாகாத செல்லுபடியாகும் விற்பனை உரிமங்களை வைத்திருப்பதால், அக்டோபர் வரை நாங்கள் இன்னும் சலுகை வழங்குகிறோம்," என்று அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த காலகட்டத்தில், வணிகர்கள் தங்கள் தற்போதைய இருப்புகளை விற்று, படிப்படியாக விற்பனையை நிறுத்த வேண்டும் என்று மாநில அரசு எதிர்பார்க்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி, உள்ளூராட்சி மன்றப் பகுதிகளுக்குள் உள்ள அனைத்து வணிக வளாகங்களிலும் மின்னணு சிகரெட்டுகள் மற்றும் வேப்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்படும் என்றும், இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலாக்கம் தொடங்கும் என்றும் மாநில அரசு அறிவித்தது.
இந்த சலுகையை சட்டவிரோதமாகத் தொடர்ந்து செயல்பட வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள் என்று தாம் நம்புவதாகவும், தடையை மீறும் வணிகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிவநேசன் வலியுறுத்தினார்.
"நாங்கள் போதுமான அவகாசம் வழங்கியுள்ளோம், பொது சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பின் நலன் கருதி இந்த தடையை அவர்கள் புரிந்துகொண்டு இணங்குவார்கள் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.


