மீண்டும் F1 பந்தயம் திரும்பும் பேச்சு வார்த்தையில் மலேசியா: அன்வார்

4 அக்டோபர் 2026, 10:54 AM
மீண்டும் F1  பந்தயம் திரும்பும்  பேச்சு வார்த்தையில் மலேசியா: அன்வார்
மீண்டும் F1  பந்தயம் திரும்பும்  பேச்சு வார்த்தையில் மலேசியா: அன்வார்

செப்பாங், அக் 4 : இவ்வார இறுதியில் செப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்துக்கு (SIC) எஃப்1 பந்தயம் திரும்பியதைத் தொடர்ந்து, மலேசிய கிராண்ட் பிரி ஃபார்முலா 1 பந்தயத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மலேசியாவிற்கு மீண்டும் எஃப்1 பந்தயம் திரும்ப வாய்ப்பு உள்ளதா என்று இன்று அவரிடம் கேட்கப்பட்டபோது, "நான் அதை எதிர்நோக்குகிறேன். நாங்கள் விவாதித்து வருகிறோம்," எனப் பிரதமர் கூறினார்.

இன்று நடைபெற்ற 'கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ்' பந்தயத்தின் போது, ​​பந்தயத் களத்தில் முன்னாள் எஃப்1 ஓட்டுநரும், ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளருமான மார்ட்டின் பிரண்டில் உடனான ஒரு சுருக்கமான உரையாடலின் போது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

செப்பாங்கில் பெய்த பலத்த மழையால் நனைந்த அன்வார், நாட்டில் எஃப்1 பந்தயத்தை மீண்டும் பார்ப்பதில் தனது உற்சாகத்தையும் பகிர்ந்து கொண்டார்.

"நீங்கள் பார்க்கிறீர்கள், நான் மழையில் நனைந்துவிட்டேன், ஆனாலும் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியடைகிறது," என்று அவர் பிரண்டிலிடம் கூறினார்.

முன்னதாக, பலத்த மழை மற்றும் பந்தயப் பாதையில் தேங்கியிருந்த தண்ணீர் காரணமாக பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

படம்: ராய்ட்டர்ஸ்

பின்னர் பந்தயம் இறுதியாக மாலை 4.35 மணிக்குத் தொடங்கியது.

2017 -ஆம் ஆண்டிற்குப் பிறகு செப்பாங்கில் எஃப்1 பந்தயம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

இருப்பினும் இந்த பந்தயம் அதிகாரப்பூர்வமாக 'மலேசியாவில் ஃபார்முலா 1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ்' என்று அழைக்கப்படுகிறது.

படம்: ராய்டர்ஸ்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக எழுந்த பாதுகாப்பு கவலைகளைத் தொடர்ந்து பஹ்ரைன் பந்தயம் செப்பாங்கிற்கு மாற்றப்பட்டது.

இது மலேசியாவிற்கு எஃப்1 அட்டவணையில் எதிர்பாராத மறுபிரவேசத்தை அளித்துள்ளது.

மலேசியா இதற்கு முன்பு 1999 முதல் 2017 வரை ஒவ்வொரு ஆண்டும் செப்பாங்கில் தனது சொந்த எஃப்1 பந்தயத்தை நடத்தியது.

பின்னர், அதிக செலவுகள் மற்றும் குறைந்து வரும் வருவாயைச் சுட்டிக்காட்டி மலேசியா, F1 பந்தய அட்டவணையில் இருந்து விலகியது.

இந்த பந்தயத்தை நடத்துவதற்கான முக்கிய செலவுகளை பஹ்ரைன் ஏற்கனவே ஏற்றுக்கொண்டதால், மலேசியா ஏற்பாட்டுப் பணிகளுக்காக RM10 மில்லியன் முதல் RM16 மில்லியன் வரை மட்டுமே செலவிட வேண்டியிருக்கும் என்று இதற்கு முன்பு அரசாங்கம் கூறியிருந்தது.

படம்: ராய்டர்ஸ்

இருப்பினும், எஃப்1 அட்டவணையில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கு உரிமைக் கட்டணம் உட்பட மலேசியாவிற்கு ஆண்டுக்கு குறைந்தது RM300 மில்லியன் செலவாகும் என்று செப்பாங் அனைத்துலக பந்தய தளத்தின்(SIC) தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ஹான் ஷாஃப்ரிமான் ஹனிப் இதற்கு முன்பு மதிப்பிட்டிருந்தார்.

நிரந்தர மறுபிரவேசம் என்பது, அரசாங்கத்தால் இந்தச் செலவை நியாயப்படுத்த முடியுமா மற்றும் நெரிசலாகி வரும் எஃப்1 அட்டவணையில் ஓர் இடம் கிடைக்குமா என்பதைப் பொறுத்தே அமையும் என்றும் அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.