1 லட்சம் பார்வையாளர்கள்; RM100 கோடி வருவாய்: செப்பாங்கில் களை கட்டும் F1 பந்தயம்

29 செப்டெம்பர் 2026, 4:19 AM
1 லட்சம் பார்வையாளர்கள்; RM100 கோடி வருவாய்: செப்பாங்கில் களை கட்டும் F1 பந்தயம்
1 லட்சம் பார்வையாளர்கள்; RM100 கோடி வருவாய்: செப்பாங்கில் களை கட்டும் F1 பந்தயம்
1 லட்சம் பார்வையாளர்கள்; RM100 கோடி வருவாய்: செப்பாங்கில் களை கட்டும் F1 பந்தயம்

செப்பாங், செப் 29 - இவ்வார இறுதியில் செப்பாங் அனைத்துலகப் பந்தயத் தளத்தில் நடைபெறவுள்ள 'ஃபார்முலா 1 (F1) கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ்' (Gulf Air Bahrain Grand Prix) பந்தயத்திற்கான டிக்கெட் விற்பனை, ஒரு லட்சத்தை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை சுமார் 95,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன என செப்பாங் அனைத்துலகப் பந்தயத் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ஹான் ஷாப்ரிமான் ஹனிப் தெரிவித்தார்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவில் F1 பந்தயம் மீண்டும் நடைபெறுவதால், ரசிகர்கள் மத்தியில் இந்த அமோக வரவேற்பு காணப்படுகிறது.

“இதற்கு முன்பு மலேசிய GP நடைபெற்றப் பொற்காலங்களில் 40,000 முதல் 50,000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்கும். ஆனால் இம்முறை வரவேற்பு அசாத்தியமாக உள்ளது.

மலேசியா மற்றும் பஹ்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இந்த ஒத்துழைப்பு ஒரு தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைக்கு இப்பந்தயம் ஒரு முறை மட்டுமே நடப்பதால், இது பெரும் ஈர்ப்பாக மாறியுள்ளது” என்றாரவர்.

இந்த பந்தயத்திற்கான டிக்கெட்டுகள் 3 நாட்களுக்கான அனுமதியாக (3-day pass) மட்டுமே விற்கப்படுகின்றன. ஒரு நாள் டிக்கெட்டுகள் இல்லை.

செப்பாங் பந்தயத் தளத்தில் இதற்கு முன் பதிவான மிக உயர்ந்த வருகை 2008-ஆம் ஆண்டில் ஆகும்.

அப்போது 3 நாள் நிகழ்ச்சியில் 126,690 பார்வையாளர்கள் கலந்துக் கொண்டனர்.

தற்போது பஹ்ரைன் F1 கார் பந்தயத்திற்காக, டிக்கெட் வாங்கியவர்களில் 50 விழுக்காட்டினர் அனைத்துலக பார்வையாளர்கள் ஆவர்.

இது மலேசியாவின் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்திற்குப் பெரிய நன்மையைத் தரும்.

மேலும், இந்த பந்தயத்தின் மூலம் மலேசியாவிற்கு சுமார் 240 மில்லியன் அமெரிக்க டாலர் (RM 979 மில்லியன்) பொருளாதார வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பதாக பஹ்ரைன் அனைத்துலகப் பந்தயத் தளத்தின் (BIC) தலைமை நிர்வாகி ஷேக் சல்மான் ஈசா அல் கலீஃபா தெரிவித்தார்.

இது தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் போக்குவரத்துத் துறைகளுக்குப் பெரும் பயனளிக்கும்.

ரசிகர்களைக் கவர பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் 3 (சனிக்கிழமை) அன்று கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புகழ்பெற்ற DJ மற்றும் இசைக்கலைஞரான ஆக்ஸ்வெல் (Axwell) நேரலையில் நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

பந்தயம் முடியும் அக்டோபர் 4 (ஞாயிற்றுக்கிழமை) அன்று உலகப் புகழ்பெற்ற பாடகரும் தயாரிப்பாளருமான மார்ட்டின் காரிக்ஸ் (Martin Garrix) இசை நிகழ்ச்சியை வழிநடத்துவார்.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.