ஷா ஆலம், அக் 4: இவ்வாண்டு தாவாஸ் (TAWAS) கல்வி நிதி திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களில் ஒருவர் கிறிஸ்டினா ஷியாமளா (43).
தனது மூத்த மகன் விஷால் சுந்தரராஜனுக்கு (18) கிடைத்த இந்த 1,500 ரிங்கிட் நிதியுதவி, மலாக்காவில் உள்ள மலேசிய கடல்சார் அகாடமியில் (ALAM) அவரது கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத் தலைமுறையினரும் இத்தகைய பலன்களைத் தொடர்ந்து பெற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

நேற்று கிள்ளான் கே.எஸ்.எல் (KSL ) மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ' தாவாஸ்' நிகழ்ச்சியில் உதவியினைப் பெற்றுக் கொண்டப் பின்னர் மீடியா சிலாங்கூரிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த தாவாஸ் உதவியைப் பெற்ற மற்றொருவர் 18 வயது பி. பிரத்திங்கரா.

சிறு வயதிலிருந்தே தாம் தாவாஸ் திட்டத்தை அறிந்திருப்பதாகவும் 18 வயதை எட்டியப் பிறகு இந்த நன்மையைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.
சிலாங்கூர் அரசாங்கம் இவ்வாண்டு 18 வயதை எட்டிய முதற்கட்ட 21,000 தாவாஸ் (TAWAS) பெறுநர்களுக்கு தலா 1,500 ரிங்கிட் வழங்கும் திட்டத்திற்காக, 3 கோடியே 10 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது.
சிலாங்கூர் மாநிலக் குழந்தைகள் அறக்கட்டளையின் (YAWAS) கீழ் நிர்வகிக்கப்படும் இந்த 'தாவாஸ்' (Tabung Warisan Anak Selangor) நிதி திட்டம், சிலாங்கூரில் பிறந்த பிள்ளைகள் 18 வயதை அடையும் போது அவர்களின் கல்விச் செலவுகள் மற்றும் கல்வித் தேவைகளை நிறைவு செய்வதற்காகப் பெற்றோர்களின் சுமையைக் குறைக்க நிதியுதவியை வழங்குகிறது.







