ஷா ஆலாம், செப் 5 : 2008-ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பிறந்த சிலாங்கூர் குழந்தைகள் பாரம்பரிய நிதியின் (TAWAS) உறுப்பினர்கள், தங்களின் மூன்றாம் கட்ட (Phase 3) நிதியைப் பெறுவதற்கான கோரிக்கையை, செப்டம்பர் 14-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என சிலாங்கூர் குழந்தைகள் பாரம்பரிய அறக்கட்டளை (YAWAS) கேட்டுக் கொண்டுள்ளது.
"கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம். உங்களது விண்ணப்பங்கள் மூன்றாம் கட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படுவதை உறுதி செய்ய, உடனடியாகக் கோரிக்கைகளைச் சமர்ப்பியுங்கள்" என்று அந்த அறக்கட்டளை அதன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
மூன்றாம் கட்ட விண்ணப்பதாரர்களுக்கான நிதி செப்டம்பர் 15 முதல் 30-ஆம் தேதிக்குள் வழங்கப்படும்.
உறுப்பினர்கள் தங்களின் தகுதியைச் சரிபார்த்து, TAWAS இணையத்தளத்தின் வழி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிலாங்கூரில் பிறக்கும் குழந்தைகளுக்கான நீண்டகாலப் பயனாக TAWAS திட்டம் கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், உறுப்பினர்கள் 18 வயதை எட்டும்போது இந்த நிதியைப் பெற தகுதி பெறுகின்றனர்.
அதன்படி, 2008-ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் இவ்வாண்டு முதல் தங்களின் நிதியைப் பெறத் தொடங்கியுள்ளனர்.







