ஷா ஆலம், ஆக 4 - 'Tabung Warisan Anak Selangor' (TAWAS) தவாஸ் எனப்படும் சிலாங்கூர் குழந்தைகளுக்கான சேமிப்பு- கல்வி நலத் திட்டத்தின் கீழ் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய 1,500 ரிங்கிட் பலனை இன்னும் 12,626 பேர் கோராமல் இருப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
ஜூலை 20-ஆம் தேதி நிலவரப்படி, 2008-இல் பிறந்த 8,642 பேர் மட்டுமே தங்களது கோரிக்கைகளை சமர்ப்பித்து அதற்கான தொகையைப் பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார்.
TAWAS என்பது YAWAS-இன் கீழ் உள்ள ஒரு மாநில அரசு திட்டமாகும்.
இது சிலாங்கூரில் பிறந்தவர்கள் 18 வயதை அடையும் போது அவர்களுக்கு நிதிப் பலன்களை வழங்குகிறது.
"அவர்களைத் தொடர்புகொள்ள அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உதாரணமாக, 'மீண்டும் பள்ளிக்கு திரும்பும்' (Back To School) திட்டத்தின் போது, இதுவரை பலன்களைக் கோராதவர்களின் தகவல்களைப் புதுப்பிக்க யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (YAWAS) உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுகிறோம்.
"அடுத்த கட்டமாக, அறிவிப்புகளைத் தீவிரப்படுத்துவோம் மற்றும் இந்த பலனைக் கோராதவர்களைக் கண்டறிய சமூகத் தலைவர்களுடன் இணைந்து செயல்படுவோம்.
2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள், இந்த முயற்சியை முறைப்படுத்தி, மாநிலம் முழுவதும் உள்ள சமூகத் தலைவர்களின் ஒத்துழைப்போடு அனைவரையும் கண்டறிவோம். இதன் மூலம் எந்தவொரு பயனாளியும் விடுபட மாட்டார்," என்று அவர் மாநில சட்டமன்ற கூட்டத்தின்போது தெரிவித்தார்.
TAWAS உறுப்பினர்கள் 18 வயதை எட்டும்போது மட்டுமே இந்த பலன்களைக் கோர முடியும் . மேலும், YAWAS தொகையை அங்கீகரிப்பதற்கு முன்பு அத்திட்டத்திற்கு தகுதியானவர்கள், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமிருடின் கூறினார்.
இதற்கிடையில், TAWAS திட்டம் 2019-இல் முடிவடைந்த போதிலும், சிலாங்கூரில் பிறந்த குழந்தைகள் புதிய திட்டங்களின் கீழ் அதே பலனைத் தொடர்ந்து பெறலாம் என்று அவர் மேலும் கூறினார்.
2008-ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டபோது சிலாங்கூர் அரசாங்கம் ஆண்டுக்கு 50 மில்லியன் (RM50 million) முதல் 60 மில்லியன் (RM60 million) வரை ஒதுக்கீடு செய்தது.
எனினும்"TAWAS முடிவடைந்து விட்டாலும், 'இல்திசாம் அனாக் சிலாங்கூர்' (Iltizam Anak Selangor) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இதன் கீழ் அவர்கள் பிறந்தது முதல் SSPN-தேசிய கல்விச் சேமிப்புத் திட்டம் மூலம் அரசாங்கம் 500 ரிங்கிட்டை வழங்குகிறது.
இதில் பெற்றோர்களும் சேமிப்பைச் சேர்க்கலாம்.
"இக்குழந்தைகள் உயர்கல்வியைத் தொடரும்போது வழங்கப்படும் சிலாங்கூர் உயர்கல்வி நிறுவன கல்வி உதவித்தொகை (1,000 ரிங்கிட்) மற்றும் SSPN-இலிருந்து கிடைக்கும் குறைந்தபட்ச 500 ரிங்கிட் ஆகியவற்றுடன் சேர்த்து, அவர்கள் 18 வயதை அடையும் போது 1,500 ரிங்கிட் அல்லது கூடுதல் சேமிப்பு இருந்தால் அதைவிட அதிகமான தொகையைப் பெறுவார்கள்," என்று அமிருடின் கூறினார்.







