ஷா ஆலம், அக் 4: ஜோகூர், யோங் பெங்கில் நேற்று பள்ளி மாணவி ஒருவர் மரணமடைந்த சம்பவத்தில், ஏதேனும் அலட்சியம் அல்லது கடமைத் தவறியது கண்டறியப்பட்டால் கல்வி அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.
அமைச்சின் பொறுப்பின் கீழ் உள்ள அனைத்து விஷயங்களும் விரிவாகப் பரிசோதிக்கப்படும்.
அந்த ஆய்வில் கூடுதல் வகுப்புகளின் போது மாணவர்களின் வருகைப்பதிவு, பாதுகாப்புப் பணிகள் மற்றும் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணிகள் ஆகியவை அடங்கும்.
இந்த ஆய்வுக்குப் பாதுகாப்பு நிறுவனமும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, " என்று கல்வியமைச்சர் தமது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார் .
கல்வி அமைச்சு, போலிசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும், போலீஸாரின் விசாரணைக்கு முன்கூட்டியே எந்தவொரு முடிவையும் அறிவிக்காது என்றும் ஃபத்லினா கூறினார்.
இச்சம்பவம் குறித்த நிலவரங்களை நேரில் அறிந்துகொள்வதற்காக அவர் இன்று காலை யோங் பெங் சென்றிருந்தார் .
அங்கு போலீஸார், ஜோகூர் மாநில கல்வித் துறை, பத்து பகாட் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து விளக்கங்களைப் பெற்றார்.
ஃபத்லினா, பத்து பகாட்டில் உள்ள சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் .

பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி வளாகத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
விசாரணைக்கு உதவுவதற்காக 16 வயதுடைய மாணவன் கைது செய்யப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் (கொலை வழக்கு) ஆறு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.





