யோங் பெங்கில் பள்ளியில் மாணவியைக் கொலை செய்ததாக வகுப்புத் தோழன் மீது குற்றச்சாட்டு

15 அக்டோபர் 2026, 5:31 AM
யோங் பெங்கில் பள்ளியில் மாணவியைக் கொலை செய்ததாக வகுப்புத் தோழன் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலாம், அக் 15 - வகுப்புத் தோழியான ஐரின் சோஃபியாவைக் கொலை செய்ததாக 16 வயது மாணவன் மீது பத்து பகாட் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

படிவம் நான்கு பயிலும் அந்த மாணவன், மாஜிஸ்திரேட் முஸ்தகிம் சுகர்ணோ முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர் , அதனைப் புரிந்து கொண்டதாகத் தலையசைத்தான்.

கொலைக் குற்றங்கள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவனிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4 மணி இடைப்பட்ட நேரத்தில், யோங் பெங் பகுதியில் உள்ள டத்தோ செத் தேசிய இடைநிலைப்பள்ளியின் மண்டபத்தில் ஐரின் சோஃபியாவை, அந்த மாணவன் கொலை செய்ததாகக் குற்றப்பதிவில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவியல் சட்டப் பிரிவு 302-இன் கீழ் அவன் மீது சுமத்தப்பட்டுள்ள இக்குற்றத்திற்கு, மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்க முடியும்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் டிசம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட மாணவனுக்கு உத்தரவாதம் எதுவும் வழங்கப்படவில்லை; அவன் சார்பில் வழக்கறிஞர்கள் சுஹைலா ஷாஃபியுதீன் மற்றும் முகமட் அஸ்லான் ஷா ஆகியோர் முன்னிலையாகினர்.

கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில், 'ஃபியா' என்று அன்போடு அழைக்கப்படும் ஐரின் சோஃபியா மாலை 5.50 மணியளவில் பள்ளி மண்டபத்தில் இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

யோங் பெங்கில் உள்ள பள்ளியில் கொலை செய்யப்பட்ட மாணவி ஐரீன் சோஃபியா : படம் - ஃபேஸ்புக்

குடும்பத்தில் ஒரே பெண் பிள்ளையான அவர், மாலை 5 மணிக்குக் கூடுதல் வகுப்புகள் முடிந்த பிறகும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

அவரது மோட்டார் சைக்கிள் பள்ளியிலேயே இருப்பதை அவரது தோழி ஒருவர் பார்த்து, அவரது பாட்டியின் வீட்டிற்குச் சென்று தகவல் கொடுத்தப் பின்னரே குடும்பத்தினர் தேடத் தொடங்கியுள்ளனர்.

இறுதியில், அவர் பள்ளி மண்டபத்திற்குள் காய்ந்த இரத்தக் கறைகளுடனும், தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்களுடனும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அந்த மாணவனைப் போலீசார் கைது செய்தனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.