ஜோகூர் பாரு, அக்.9 - காதல் நிராகரிப்பால் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக, பத்து பஹாட், யொங் பெங்கில் உள்ள இடைநிலைப் பள்ளியில் 16 வயது மாணவி ஐரின் சோஃபியா மொஹமட் கைரூல் ஃபைசால் கொலை செய்யப்பட்டிருக்கலாமென போலீஸ் நம்புகிறது.
எனினும், விசாரணை இன்னும் நடந்து வருவதால் கொலைக்கான காரணம் இன்னும் உறுதியாகவில்லை என ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப் ரஹ்மான் அர்சாத் தெரிவித்தார்.
"சந்தேக நபர், பாதிக்கப்பட்ட மாணவி மீது கொண்டிருந்த மனக்கசப்பு, தனது காதல் முயற்சிகள் நிராகரிக்கப்பட்டது மற்றும் அந்த மாணவி தனது உற்ற நண்பருடன் பழகியது போன்ற காரணங்களால் இக்கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸ் நம்புவதாக, இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
விசாரணையின் ஒரு பகுதியாக அந்த அம்சமும் ஆராயப்படும்," என்றாரவர்.
விசாரணைக்கு உதவ கைது செய்யப்பட்டிருக்கும் 16 வயதுடைய நபர், பாதிக்கப்பட்ட மாணவியின் சக வகுப்புத் தோழன் என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை போலீஸ் கண்டறியவில்லை.
அக்டோபர் 4 முதல் 8 வரை யோங் பெங் பகுதியில் நடத்தப்பட்ட விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவரைத் தாக்கப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சுமார் 96 சென்டிமீட்டர் நீளமுள்ள இரும்பு கம்பி உள்ளிட்ட பல பொருட்களைப் போலீஸ் கைப்பற்றியதாக அப் ரஹாமான் தெரிவித்தார்.
அந்த இரும்பு கம்பியின் ஒரு முனையில் நீல நிற கழுத்துப்பட்டை (necktie) சுற்றப்பட்டிருந்தது.
தாக்குதலின் போது அது கைப்பிடியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
"பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, தாக்குதல்கள் தலையைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம். ஆனால் பாதிக்கப்பட்டவரின் உடல், கைகள் மற்றும் பல பாகங்களிலும் காயங்கள் இருந்தன," என்று அவர் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்தில் மேசைகள் மற்றும் நாற்காலிகள் கவிழ்ந்து கிடந்ததாலும், பூந்தொட்டி ஒன்று உடைந்திருந்ததாலும், பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே கைகலப்பு நடந்திருக்கலாம் என்று போலீஸ் நம்புகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றதற்கான அறிகுறிகளும் இருந்தன. இருப்பினும், பூந்தொட்டி ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
கைதான நபருக்குப் பள்ளியில் எந்தவொரு கட்டொழுங்குப் பிரச்சனையும் இல்லை என்றும், அந்த இளைஞனின் மனநிலை குறித்த கேள்விகள் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டால், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மனநல மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் இச்சம்பவத்துக்கான விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. மேல் உத்தரவுகளுக்காக விசாரணை ஆவணங்கள் இன்று ஜோகூர் அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.
அக்டோபர் 3-ஆம் தேதி மாலை 5.50 மணியளவில் யோங் பெங்கில் உள்ள பள்ளி மண்டபத்தில் ஐரின் சோஃபியா இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.
பின்னர் அவர் இறந்துவிட்டதாக உறுதிச் செய்யப்பட்டது.




