ஷா ஆலம், அக் 4: சாலைப் போக்குவரத்துத் துறையின் வசூல் முகவர்களாகச் செயல்பட்டு வந்த மைஈஜி (My EG Sdn Bhd) மற்றும் ஜெட்ரிக்ஸ் ஏஐ (Zetrix AI Bhd) நிறுவனங்களின் சேவைகள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நாளை செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.
அந்தச் செய்தியாளர் சந்திப்பு நாளை காலை 11 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள போக்குவரத்து அமைச்சில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் இதுவரை தீர்க்கப்படாத பொறுப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவ்விரு நிறுவனங்களின் சேவைகளும் நாளை முதல் இடைநீக்கம் செய்யப்படுவதாக சாலைப் போக்குவரத்துத் துறை இதற்கு முன்னதாக அறிவித்திருந்தது.
அரசாங்கத்திற்கு தர வேண்டிய 200 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான வருவாய் நிலுவைத் தொகையை ஜெட்ரிக்ஸ் ஏஐ (Zetrix AI) நிறுவனம் வைத்துள்ளது என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட சாலை வரி , ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் போக்குவரத்து அபராதம் ஆகியவற்றுடன் தொடர்புடைய நிலுவைத் தொகையை போக்குவரத்து அமைச்சு 'தி எட்ஜ்' (The Edge) ஊடகத்திடம் உறுதிப்படுத்தியது.
அதிகாரப்பூர்வ ஆவணங்களை மேற்கோள் காட்டி 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' (The Straits Times) வெளியிட்டுள்ள செய்தியில், மே 2023-இல் சாலை போக்குவரத்து துறையுடன் ஜெட்ரிக்ஸ் ஏஐ மேற்கொண்ட மூன்று ஆண்டுகால ஒப்பந்தம் தொடங்கியது முதலே இந்த நிலுவைத் தொகை சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டடது.
ஜெட்ரிக்ஸ் ஏஐ (Zetrix AI) நிறுவனம் முன்னதாக 'மைஈஜி சர்வீசஸ் பெர்ஹாட்' (MYEG Services Bhd) என்று அழைக்கப்பட்டது என்பதும், இது 2000ஆம் ஆண்டு முதல் சாலை போக்குவரத்து துறை சார்ந்த பணிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பல இணையவழிச் சேவைகளை வழங்கி வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





