கோலாலம்பூர், அக் 13: மைஈஜி ( MyEG) மற்றும் செட்ரிக்ஸ் ஏஐ ( Zetrix AI Berhad) ஆகிய இரு நிறுவனங்கள், அரசாங்கத்திற்குச் சொந்தமான 23 கோடியே 9 லட்சம் ரிங்கிட் வருவாய் வசூலை முறைப்படி மாற்றத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து போலீசார், விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.
மைஈஜி குழுமத்தின் கீழ் இயங்கும் அவ்விரு நிறுவனங்களின் அரசாங்க வருவாய் சார்ந்த நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி பெறப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து, இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ருஸ்தி மொஹ்ட் இசா தெரிவித்தார்.
தற்போது இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 409-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்விசாரணைக்கு உதவும் வகையில் இதுவரை ஆறு சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பல முக்கிய நபர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் டத்தோ ருஸ்தி அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.





