பல ஆண்டுகால சிரமத்திற்கு விடிவு: 74 வயது ரவ்ஜாவுக்கு புதிய இல்லம்

2 அக்டோபர் 2026, 11:06 AM
பல ஆண்டுகால சிரமத்திற்கு விடிவு: 74 வயது ரவ்ஜாவுக்கு புதிய இல்லம்

கிள்ளான், அக்.2: பல ஆண்டுகளாக மழை பெய்யும் போதெல்லாம் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து, ஒழுகும் கூரையுடன் அச்சத்திலேயே வாழ்ந்து வந்த 74 வயதான ரவ்ஜா மார்சிட்டின் வாழ்க்கையில் தற்போது ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

கம்போங் பாரு தெலோக் கோங்கில் வசித்து வரும் அவருக்கு, சிலாங்கூர் மாநில அரசின் ``Kerajaan Prihatin Selangor`` வீட்டு உதவித் திட்டத்தின் மூலம் புதிய வீடு கிடைத்துள்ளது.

பல ஆண்டுகளாகப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த பழைய வீட்டை விட்டுவிட்டு, இப்போது பாதுகாப்பான மற்றும் வசதியான வீட்டில் அவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

ரவ்ஜா மார்சிட்

அதோடு, நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று பிள்ளைகளின் தாயான அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலும் இருந்து வருகிறார். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த நிலையில், உடல்நலப் பிரச்சனைகளையும் தனிமையையும் எதிர்கொண்டு வாழ்க்கையைத் தொடர வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், வறுமை ஒழிப்புப் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு மேற்கொண்ட சந்திப்பின்போது, புதிய வீட்டைப் பார்த்த மகிழ்ச்சியில் ரவ்ஜாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

புதிய வீடு அவருக்கு வெறும் கட்டிடம் அல்ல; பல ஆண்டுகளாக மழை பெய்யும் போதெல்லாம் மனதில் எழுந்த பயத்திற்கு கிடைத்த ஒரு நிம்மதியான பதிலாக அது அமைந்துள்ளது.

22 அடி அகலமும் 30 அடி நீளமும் கொண்ட இந்த புதிய வீட்டில் மூன்று படுக்கையறைகள் மற்றும் இரண்டு குளியலறைகள் உள்ளன. குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ரவ்ஜாவின் இரண்டாவது மகனான 45 வயது நோராஸ்மான் அகமட், தனது குடும்பம் முதலில் பழைய வீட்டைப் புதுப்பிக்க உதவி கோரவே திட்டமிட்டதாகத் தெரிவித்தார்.

வீட்டின் நிலைமையைப் புலாவ் இண்டா பகுதியின் தலைவர் நேரில் ஆய்வு செய்த பின்னரே புதிய வீடு கட்டுவதற்கான உதவிக்கு விண்ணப்பிக்க குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக, அருகிலுள்ள பள்ளிவாசலில் பணிபுரியும் நோராஸ்மான் தெரிவித்தார்.

அதன்படி, பழைய வீட்டின் அருகிலேயே புதிய வீடு கட்டப்பட்டது.

விண்ணப்ப செயல்முறைக்கு சுமார் ஆறு மாதங்கள் எடுத்த நிலையில், குடும்பத்தின் பெரும்பாலான நிர்வாகப் பணிகளை நோராஸ்மானின் சகோதரி கவனித்துக் கொண்டார்.

நோராஸ்மான் அகமட்

விண்ணப்ப நடைமுறை மிகவும் சிக்கலானதாக இருக்கவில்லை என்றும், புதிய வீட்டின் கட்டுமானப் பணிகள் சுமார் ஒன்றரை மாதத்திலேயே நிறைவடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய வீடு கடந்த ஆண்டு அக்டோபரில் நிறைவடைந்தது. அதன்பிறகு, ரவ்ஜா அங்கேயே வசித்து வருகிறார்.

ரவ்ஜாவின் குடும்பத்திற்கு இந்த வீடு ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமாக மாறியுள்ளது. உடல்நலப் போராட்டம், கணவரின் இழப்பு, பழைய வீட்டின் பாதுகாப்பற்ற நிலை என பல சோதனைகளை எதிர்கொண்ட ஒரு தாய்க்கு, இந்த புதிய இல்லம் மனதுக்கு நிம்மதியை வழங்கியுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.