கிள்ளான், அக்.2: சிலாங்கூர் அரசின் பிரியாதின் வீட்டு உதவித் திட்டத்தின் சமீபத்திய ஒப்புதல்களின் கீழ், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 43 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இதற்காக மொத்தம் RM2.25 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இரண்டு முக்கிய உதவிகள் வழங்கப்படுவதாக மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புப் பிரிவுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் தெரிவித்தார்.
புதிய வீடு கட்டுவதற்கு ஒரு வீட்டுக்கு RM85,000 வரையிலும், வீட்டின் சேதத்தின் அளவைப் பொறுத்து பழுதுபார்ப்புப் பணிகளுக்கு RM35,000 வரை உதவி வழங்கப்படுகிறது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், மிகவும் பழுதடைந்த மற்றும் பாதுகாப்பற்ற வீடுகளில் வசிப்பவர்கள் உள்ளிட்டோரின் தேவைகள் மற்றும் தகுதி அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
நிதி ஒதுக்கீடு வரையறுக்கப்பட்டுள்ளதால் அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் உதவி வழங்க முடியாது என்றும், உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளதாகவும் பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
இன்று கம்போங் பாரு தெலோக் கோங்கில் இத்திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்காக கட்டப்பட்ட புதிய வீட்டை பார்வையிட்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, போர்ட் கிள்ளான் தொகுதிக்கான நகராண்மைக் கழக உறுப்பினர் முகமட் ஷாருல் அட்னான், உதவி பெற விரும்பும் பொதுமக்கள் தங்களது கிராமத் தலைவர்கள், பெங்குலு அல்லது மாவட்ட அலுவலகம் மூலம் விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம் என்றார்.
புதிய வீடு கட்டுவதற்கான உதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்ப ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கு முன்பு அந்த வீட்டைக் கட்டுவதற்கான நிலத்தைத் தங்களது சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டும்.
பழுதடைந்த மற்றும் பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அவர்களின் நீண்டகால வாழ்க்கைத் தேவைகளையும் கருத்தில் கொண்டு வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதே சிலாங்கூரின் அரசின் நோக்கமாகும்.
மாவட்ட வாரியான பயனாளிகள்
சமீபத்திய ஒப்புதல்களின் கீழ் மொத்தம் 43 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கிள்ளான் – 13 பயனாளிகள்; RM568,120 ஒதுக்கீடு
கோலா லங்காட் – 10 பயனாளிகள்; RM538,127.57 ஒதுக்கீடு
சபாக் பெர்னாம் – 7 பயனாளிகள்; RM429,866 ஒதுக்கீடு
கோம்பாக் – 6 பயனாளிகள்; RM310,000 ஒதுக்கீடு
பெட்டாலிங் – 4 பயனாளிகள்; RM253,000 ஒதுக்கீடு
உலு சிலாங்கூர் – 3 பயனாளிகள்; RM154,947 ஒதுக்கீடு







