கோலாலம்பூர்: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 55 மலேசியர்களில் ஒருவர் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளார்.
வெளியுறவு அமைச்சு வெளியிட்ட இந்த அண்மையத் தகவலைத் தங்கள் அமைப்பு கவனத்தில் கொண்டுள்ளதாக
மலேசிய ஒற்றுமை: குடும்பங்களின் நம்பிக்கை (MASFIH) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் மணிவண்ணன் இரத்தினம் தெரிவித்தார்.
பாதுகாப்பாக திரும்பிய நபர் சீன ஆடவர் என்றும்,அவர் தனியாகப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், நேற்று காத்மாண்டுவில் உள்ள மலேசிய தூதரகத்தை சென்றடைந்தார்.
37 நாட்களுக்குப் பிறகு, அவர் இன்று காலை மலேசியாவை வந்தடைந்து தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.
MASFIH அமைப்பிற்கும் அந்த நபரின் குடும்பத்தினருக்கும் இடையே நடந்த நேரடித் தொடர்பின் மூலம், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு, அதாவது ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிற்பகல் 3.26 மணிக்கு அவர் நங்தாலியில் (Nagthali ) இருந்தது தெரியவந்தது.
சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததாலும், மின்சாரம், தண்ணீர் மற்றும் வைஃபை (Wi-Fi) வசதிகள் இல்லாததாலும் அவர் அங்கேயே சில காலம் சிக்கிக்கொண்டதாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதனால் அவரது நடமாட்டமும் தொடர்புகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்டன.
"அவர் இறுதியாக அங்கிருந்து புறப்பட்டு, அக்டோபர் 1-ஆம் தேதி காத்மாண்டுவில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு நேரில் சென்று, இன்று காலை மலேசியா திரும்பியுள்ளார்," என்று மணிவண்ணன் கூறினார்.
இன்னும் காத்திருக்கும் குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
"ஒரு மலேசியர் பாதுகாப்பாக இருந்து, தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டு குடும்பத்துடன் இணைய முடியும் என்றால், இன்னும் தொடர்பு கொள்ள முடியாத 54 மலேசியர்கள் மீதான நம்பிக்கையை நாங்கள் கைவிட மாட்டோம்.
இன்னும் அதிசயம் நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றாரவர்.







