கோலாலம்பூர், அக் 2 — இவ்வார இறுதியில் மலேசியா நடத்தும் 2026 ஃபார்முலா 1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரி (2026 Formula 1 Gulf Air Bahrain Grand Prix) பந்தயம், ஆர்.டி.எம் (RTM) தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
செப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்தில்(SIC) நடைபெறும் இந்த உலகத்தரம் வாய்ந்த பந்தயத்தின் விறுவிறுப்பை மலேசியர்கள் அனுபவிப்பதற்கான வாய்ப்பை இந்த நேரலை ஒளிபரப்பு வழங்கும் என்று அவர் தமது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இப்போட்டிக்கான தற்காலிகத் தளமாக செப்பாங் அனைத்துலக பந்தயத் தளம் செயல்படுகிறது.
ஃபார்முலா 1, அனைத்துலக ஆட்டோமொபைல் கூட்டமைப்பு (FIA) மற்றும் மலேசியா, பஹ்ரைன் அரசாங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, மலேசியா இப்பந்தயத்தை ஏற்றும் நடத்தும் வாய்ப்பினைப் பெற்றது.
மேற்காசியாவில் ஏற்பட்ட அரசியல் பதற்றங்கள் காரணமாக பஹ்ரைனில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த இந்த கிராண்ட் பிரியை , மலேசியா தனது செப்பாங் பந்தய தளத்தில் நடத்துகிறது.
மலேசியா இதற்கு முன்பு 1999 முதல் 2017 வரை செப்பாங்கில் மலேசிய கிராண்ட் பிரி போட்டியை நடத்தியது. அதன் பிறகு எஃப்1 அட்டவணையில் இருந்து இப்பந்தயம் நீக்கப்பட்டது.






