மீண்டும் கர்ஜிக்கிறது செப்பாங் பந்தயத் தளம்; பஹ்ரைன் F1 போட்டியை நடத்துகிறது மலேசியா

26 ஜூலை 2026, 4:36 PM
மீண்டும் கர்ஜிக்கிறது செப்பாங் பந்தயத் தளம்;  பஹ்ரைன் F1 போட்டியை நடத்துகிறது மலேசியா
மீண்டும் கர்ஜிக்கிறது செப்பாங் பந்தயத் தளம்;  பஹ்ரைன் F1 போட்டியை நடத்துகிறது மலேசியா

ஷா ஆலாம், ஜூலை 27 - மலேசியா இவ்வாண்டு செப்பாங் அனைத்துலகப் பந்தயத் தளத்தில், ஃபார்முலா 1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரி (Gulf Air Bahrain Grand Prix) கார் பந்தயத்தை நடத்தவுள்ளது .

உலகத்தரம் வாய்ந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு மலேசியா தயாராக இருப்பதற்கான சான்றாக அந்த அந்த வாய்ப்பு அமைந்திருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அப்பந்தயத்தை நடத்துவது குறித்து பஹ்ரைனின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான சல்மான் பின் ஹமத் அல் கலீஃபா மற்றும் ஃபார்முலா 1 தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்டெபானோ டொமினிகாலி (Stefano Domenicali)ஆகியோருடன் தாம் பேசியதாக அன்வார் கூறினார்.

மலேசியா மீது பஹ்ரைன் வைத்துள்ள நம்பிக்கைக்கு அவர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

"இந்த ஒத்துழைப்பு உலகத்தரம் வாய்ந்த ஒரு விளையாட்டுப் போட்டியை நடத்துவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. இது மலேசியாவிற்கும் பஹ்ரைன் அரசாட்சிக்கும் இடையிலான நீடித்த நட்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றது.

அதே வேளை, பெரிய அனைத்துலக நிகழ்வுகளை நடத்துவதற்கான மலேசியாவின் தயார்நிலையையும் திறனையும் அது மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது," என்று அவர் கூறினார்.

ஃபார்முலா 1, எஃப்.ஐ.ஏ (FIA), குழுக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை மீண்டும் செப்பாங்கிற்கு வரவேற்பதற்கு மலேசியா தயாராக உள்ளது என்றாரவர்.

பஹ்ரைன் கிராண்ட் ஃபிரி கார் பந்தயம் அந்நாட்டின் அனைத்துலக கார் பந்தயத் தளத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், மேற்காசியாவில் நீடிக்கும் பாதுகாப்பற்ற சூழலை அடுத்து அப்பந்தயம் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் , F1 வரலாற்றில் முதல் முறையாக பந்தயம் ஒன்று வெறொரு நாட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அதே தேதியான அக்டோபர் 2-இல் இருந்து 4-ஆம் தேதி வரை , பந்தயத்தின் அதே பெயரில் செப்பாங்கில் நடைபெறுகிறது.

அப்பந்தயத்துக்கான டிக்கெட் விற்பனை விபரங்கள் விரைவில் வெளியிடப்படுமென F1 அதன் அறிவிப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

1999- இல் இருந்து 2017-ஆம் ஆண்டு வரை செப்பாங் அனைத்துலக கார் பந்தயத் தளத்தில், மலேசிய கிராண்ட ஃபிரி பந்தயம் நடைபெற்று வந்தது.

பின்னர், அதிகரித்த ஏற்பாட்டுச் செலவையும், அனுமதி உரிமக் கட்டணத்தையும் சமாளிக்க முடியாததை அடுத்து, மலேசியா அந்த அனைத்துலக கார் பந்தயத்தை ஏற்று நடத்துவதை நிறுத்தியது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.