ஷா ஆலம், ஆகஸ்ட் 2 : "F1 டிக்கெட்டுடன் தள்ளுபடி" என்ற சலுகை திட்டத்தை செயல்படுத்த சிலாங்கூர் சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.
F1 டிக்கெட்டைக் காண்பித்து, தங்கும் விடுதி, சுற்றுலாத் தளம், போக்குவரத்து, உணவு ஆகியவற்றுக்கான கட்டண விலைக் குறைப்பை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உத்தேசித்திருப்பதாக சிலாங்கூர் சுற்றுலாத் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி சுவா யீ லிங் தெரிவித்தார்.
இந்த சுற்றுலாத் திட்டத்தின் மூலம், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சேவைகளைக் குறைந்த விலையில் அனுபவிக்க முடியும் என்பது மட்டுமின்றி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த வணிகர்களும் இந்த F1 கார் பந்தயத்தால் பயனடைவார்கள்," என்று அவர் கூறினார்.
அக்டோபர் 2 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கார் பந்தயத்திற்கு உலகெங்கிலும் உள்ள F1 ரசிகர்கள் மட்டுமின்றி, அதில் ஈடுபடும் அணிகள் , நிதியுதவியாளர்கள் ஆகியோரை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, சிங்கப்பூர் F1 பந்தயம் ஒரு வாரம் கழித்து, அதாவது அக்டோபர் 9 முதல் 11 வரை நடைபெறவுள்ளது.
இது சுற்றுலாப் பயணிகள் சிலாங்கூரில் தங்களின் தங்கும் காலத்தை நீட்டிப்பதை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக சுவா யீ லிங் தெரிவித்தார்.
'பந்தயத்திற்கு முன்னதாக மலேசியாவிற்கு முன்கூட்டியே வாருங்கள்' அல்லது 'அடுத்த பந்தயத்திற்காகக் காத்திருக்கும் போது பந்தயத்திற்குப் பிறகும் மலேசியாவிலேயே தொடர்ந்து தங்கியிருங்கள்' என்ற கருப்பொருளில், சுற்றுலாத் திட்டங்களை வழங்க திட்டமிட்டிருப்பதாக சுவா யீ லிங், மீடியா சிலாங்கூருக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
"இந்த பந்தயம் பஹ்ரைன் தரப்பால் வழிநடத்தப்படுகிறது. மேலும் டிக்கெட் விற்பனை மற்றும் நிதியாதரவாளர்களுக்கான ஏற்பாடுகள் உட்பட பல விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
எனவே, நிதியாதரவாளர்களின் கண்காட்சி முகப்புகள் திறக்கப்படுமா என்பது உட்பட கூடுதல் தகவல்களுக்காக நாங்கள் காத்திருக்க வேண்டுமென" சுவா யீ லிங் கூறினார்.









