ஷா ஆலாம், செப். 3: தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் அப்பகுதியில் மேற்கொண்ட களப்பயணத்தின்போது, குடியிருப்பாளர்கள் வெள்ள அபாயம் தொடர்பான தங்களது கவலைகளைத் தம்மிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில், தற்போது பயன்பாட்டில் உள்ள அவசரகால வெளியேற்றப் பாதைகளை மேம்படுத்தி, அவற்றைச் சீரமைக்க வேண்டும் என்றும் குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரகாஷ் தெரிவித்தார்.
அதேவேளை, அப்பகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள பணிகளுக்கான திட்ட அட்டவணை குறித்தும் உள்ளூர் மக்களிடம் விளக்கமளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, குடியிருப்பாளர்களிடமிருந்து குப்பை சேகரிப்பு தொடர்பான புகார்களும் தமக்குக் கிடைத்ததாகப் பிரகாஷ் கூறினார்.
குப்பைகளைச் சேகரிக்கும் பணி நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைக்கு ஏற்ப நடைபெறவில்லை என குடியிருப்பாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
KDEBWM நிறுவனத்தைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்ட போது, தற்போது குப்பை சேகரிப்பு நடவடிக்கைகளில் போதுமான லாரிகள் இல்லாதது மற்றும் சில இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமை காரணமாக இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்ததாகப் பிரகாஷ் கூறினார்.







