ஷா ஆலாம், அக்.1: போலி தங்க நகையை அடகு வைத்து பணம் பெற முயன்றதாக நம்பப்படும் ஐவரை, ஜோகூர் கோத்தா திங்கியில் போலீசார் கைது செய்தனர்.
நேற்று பிற்பகல் 1.58 மணியளவில் அங்குள்ள அடகு கடை ஒன்றின் மேலாளர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டன் யூசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.
சுமார் 23 கிராம் எடையுள்ள RM13,000 மதிப்புமிக்க தங்க வளையல் ஒன்றை அடகு வைக்க ஒருவர் அக்கடைக்கு வந்துள்ளார்.
எனினும், அந்தத் தங்க வளையலை பரிசோதித்தபோது அது போலியானது என்பது தெரியவந்ததாக யூசோஃப் கூறினார்.
இதையடுத்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, சந்தேகத்திற்குரிய ஐவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 34 முதல் 62 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் ஆவர். அவர்களில் ஒருவர் வெளிநாட்டுப் பிரஜை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையில், சந்தேக நபர்களில் ஒருவருக்கு கெடா, அலோர் ஸ்டாரில் போலி தங்கத்தை விற்பனை செய்தது தொடர்பான முந்தைய குற்றப் பதிவு இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் இருவருக்கு போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கை மூலம் கோத்தா திங்கி சுற்றுவட்டாரத்தில் போலி தங்க நகைகளை அடகு வைத்தல் அல்லது விற்பனை செய்தல் தொடர்பாக பல வழக்குகளுக்கு தீர்வு காண முடியும் என போலீசார் நம்புகின்றனர்.
இந்தச் சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 420ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
ஐந்து சந்தேக நபர்களும் அக்டோபர் 2ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.







