ஷா ஆலாம், செப்.23: 2026 அய்ச்சி நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 55 கிலோவுக்குட்பட்ட குமித்தே (kumite) பிரிவில் மலேசிய கராத்தே வீராங்கனை சி. ஷாமலாராணி தங்கப் பதக்கம் வென்றார்.
தோயோஹாஷி கூடத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஹோங்காங்கின் சாங் யீ டிங்கை வீழ்த்தி ஷாமலாராணி முதலிடத்தைப் பிடித்தார்.

இரு வீராங்கனைகளுக்கு இடையிலான போட்டி 0-0 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது; இருப்பினும், நடுவர்களின் தீர்ப்பு ஷாமலாராணிக்குச் சாதகமாக அமைந்ததால் அவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முன், அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் குல்ஷன் அலிமர்தனோவாவை ஷாமலாராணி எதிர்கொண்டார்.
அலிமர்தனோவாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றில் அலிமர்தனோவாவிடம் தோல்வியடைந்திருந்த ஷாமலாராணிக்கு, இந்த வெற்றி ஒரு மீட்சியாக அமைந்தது.







