ஷா ஆலம், அக். 1: சிலாங்கூரில் பொது போக்குவரத்து பயணக் கட்டணமாக வழங்கப்படும் மாதாந்திர RM30 மானியம், தற்போது கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter) சேவைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தகுதியுடைய சிலாங்கூர் மக்கள், ரெப்பிட் ஓன் டிமாண்ட் (Rapid On Demand), கும்புல் (Kumpool) சேவைகளுடன் இனி கேடிஎம் கொமுட்டர் பயணச்சீட்டுகளையும் RM30 மானியத்தைப் பயன்படுத்தி வாங்க முடியும்.

இதனை மாநில போக்குவரத்து துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சீ ஹான் தெரிவித்தார்.
இந்த வசதி கிள்ளான் பள்ளத்தாக்கு கேடிஎம் கொமுட்டர் சேவை, வடக்கு கேடிஎம் கொமுட்டர் சேவை மற்றும் தெற்கு Shuttle சேவை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அவர் தெரிவித்தார்.
இந்த மானியத்தைப் பயன்படுத்த விரும்பும் பயனர்கள் முதலில் Nine செயலியைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர், பயன்பாட்டில் கேடிஎம் கொமுட்டர் சேவையை தங்களது பொது போக்குவரத்து தேர்வாக குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், மாதாந்திர RM30 மானியம் Nine eWallet கணக்கில் வரவு வைக்கப்படும்.
KTMB Mobile அல்லது KITS Style செயலி மூலம் கேடிஎம் கொமுட்டர் பயணச்சீட்டை வாங்கும்போது, Nine-ஐத் தேர்வு செய்து அந்த மானியத்தைப் பயன்படுத்தலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுடைய 50,000 பயனாளிகளுக்கு ஆறு மாதங்களுக்கு மாதந்தோறும் RM30 என்ற அடிப்படையில் பயணக் கட்டண மானியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







