பெட்டாலிங் ஜெயா, செப். 27 – 2027ஆம் ஆண்டு சிலாங்கூர் பட்ஜெட்டில் ஸ்கிம் செரியா திட்டத்திற்கு குறைந்தது RM10 மில்லியன் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என மாநில வீடமைப்பு மற்றும் கலாச்சார ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா கோரிக்கை விடுத்தார்.
கூடுதல் நிதி கிடைத்தால், குறிப்பாக பழைய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகளை மேம்படுத்துவதற்கான பராமரிப்புப் பணிகளை அதிகளவில் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள 2027ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு RM5 மில்லியன் முதல் RM10 மில்லியன் வரையிலான ஒதுக்கீடு கிடைக்கும் என நம்பப்படுகிறது.
அடுக்குமாடி குடியிருப்பின் சமூக வசதிகளை மேம்படுத்துவதற்கு MARRIS (Malaysian Road Records Information System), ICU (Implementation Coordination Unit) மற்றும் Projek Selangor Penyayang ஆகியவற்றின் ஆதரவையும் பெற முடியும் என அவர் கூறினார்.

இந்த நிதி மின்தூக்கிகளைப் பழுதுபார்ப்பதற்கும், கட்டடங்களுக்கு வண்ணம் பூசுவதற்கும், வசதிகளை மேம்படுத்துவதற்கும் உதவும் என்றார் போர்ஹான்.
மேலும், பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் அவற்றை முறையாகப் பராமரிப்பது குடியிருப்பாளர்களின் பொறுப்பு என்றார்.
2011ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையில், சிலாங்கூரின் 12 ஊராட்சி அமைப்புகளிலும் மொத்தம் 389 ஸ்கிம் செரியா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டங்களுக்கு மொத்தம் RM148.2 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.







