பெட்டாலிங் ஜெயா, செப் 14 : நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து காணாமல் போயிருக்கும் 55 மலேசியர்களின் நிலையைக் கண்டறிவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
மலேசிய சிறப்புப் பேரிடர் உதவி மீட்புக் குழுவினர் (Smart) நேபாளத்திலிருந்து திரும்பினாலும், மலேசியர்களைத் தேடும் பணிகள் முடிந்துவிட்டதாகப் பொருள்படாது என விஸ்மா புத்ரா, திங்கள்கிழமை (செப்டம்பர் 14) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
" தொடர்பு கொள்ள முடியாதவர்கள் என்ற பட்டியலிலேயே பாதிக்கப்பட்ட 55 மலேசியர்களும் இன்னும் நீடிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு நிலையையும் கண்டறியும் உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன," என்று விஸ்மா புத்ரா கூறியது.
திங்கள்கிழமை நேபாளத்திலிருந்து தாயகம் திரும்பிய Smart குழுவினர், தங்களது களப்பணிகள் மற்றும் சேகரிக்கப்பட்ட தகவல்கள் குறித்து அமைச்சுக்கு விளக்கமளிக்க உள்ளனர்.
இப்பணியின் போது, நேபாள அதிகாரிகளால் பாதுகாப்பானது என்று கருதப்பட்ட பகுதிகளில், இக்குழுவினர் தரைவழித் தேடுதல்களையும், ட்ரோன்கள் (Drones) மூலமாக வான்வழி கண்காணிப்பையும் மேற்கொண்டனர்.
அமைச்சும், இதர தொடர்புடைய மலேசிய அமைப்புகள், Smart குழுவின் கண்டுபிடிப்புகளையும் நேபாளத்தின் தற்போதைய நிலவரங்களையும் ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யும்.
இதனிடையே, நேபாள அதிகாரிகள் தொடர்ந்து தேடுதல், விபர சரிபார்த்தல் மற்றும் அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருவதாக விஸ்மா புத்ரா தெரிவித்தது.
மேலும், Smart குழுவினர் நேபாள மீட்புப் பணியாளர்களுக்கு ட்ரோன் இயக்குவது குறித்த களப் பயிற்சிகளை வழங்கியதோடு, பேரிடர் நிர்வாக நடவடிக்கைகளுக்காக ஒன்பது ட்ரோன்களை தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் நிர்வகிப்பு ஆணையம் (NDRRMA) வழியாக நேபாள அரசாங்கத்திடம் வழங்கினர்.
இவ்வேளையில், காத்மாண்டுவில் உள்ள மலேசிய தூதரகம் NDRRMA, மருத்துவமனைகள் மற்றும் பிற அமைப்புகளிடமிருந்து தொடர்ந்து தகவல்களைப் பெறும்.
பாதுகாப்புச் சூழல் மற்றும் உள்ளூர் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கூடுதல் சோதனைகள் அல்லது களப் பணிகளை மேற்கொள்ளும்.
இதற்கிடையில், பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகம், இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மலேசியர்கள் குறித்த தகவல்களைப் பெற சீன அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும்.
பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களுடன் அமைச்சு நேரடித் தொடர்பில் இருப்பதாகவும், சரிபார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர்களுக்குத் தொடர் நிலவரங்கள் வழங்கப்படும் என்றும் விஸ்மா புத்ரா கூறியது.
மலேசியர்கள் தொடர்பான எந்தவொரு சரிபார்க்கப்பட்ட தகவலும், பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு முதலில் அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டது.







