ஷா ஆலாம், செப். 27 – எதிர்வரும் அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழைக் காலத்தை (MTL) எதிர்கொள்ள நாட்டில் 10,000 மெட்ரிக் டன் மீன் கையிருப்பு தயார் நிலையில் உள்ளது.
மலேசிய மீன் மேம்பாட்டு வாரியத்தின் (LKIM) தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அப்துல் சலிம் தாஜுடின் இதனைத் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மீன்பிடிப் படகுகள் கரைக்கு கொண்டு வரும் மீன் அளவு குறையக்கூடும் என்பதால், அதனை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கையிருப்பு தயார்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மீன் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால், கையிருப்பில் உள்ள மீன்கள் சந்தைக்கு வெளியிடப்பட்டு, மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வது உறுதி செய்யப்படும்.
மீன்பிடி நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்று, மீன் இறக்குமதி அதிகரிக்கும் காலகட்டத்திலேயே LKIM முன்கூட்டியே மீன் கையிருப்பைச் சேமித்து வைப்பதாக அப்துல் சலிம் விளக்கினார்.
இதன் மூலம் பருவமழைக் காலத்தில் கடலுக்குச் செல்லும் மீனவர்களின் எண்ணிக்கை குறைவதாலும், கடுமையான வானிலை காரணமாக மீன் இறக்குமதி பாதிக்கப்படுவதாலும் ஏற்படக்கூடிய விநியோகத் தடைகளைச் சமாளிக்க முடியும் என்றார்.

அதேவேளை, நாட்டின் மீன் தன்னிறைவு விகிதம் (SSR) 90 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருப்பதாகவும் அப்துல் சலிம் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் நாட்டின் மீன் விநியோகம் திருப்திகரமான அளவில் இருப்பதை இந்த நிலவரம் காட்டுவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, பருவமழைக் காலத்தில் மோசமான வானிலை நிலவும் போது மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்து, தங்களது பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அப்துல் சலிம் அறிவுறுத்தினார்.






