கோலாலம்பூர், மார்ச் 6: புடு பசாரில் தடைசெய்யப்பட்ட மீன் வகைகளையும், பல்வேறு வகையான ஆமைகளையும் வெளிப்படையாக விற்பனை செய்து வந்த பல அலங்கார மீன் கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா கூட்டரசு பிரதேசங்களுக்கான மீன்வளத்துறை இயக்குநர் சுஹானா கசிரோன் கூறுகையில், காலை 11 மணியளவில் ஆறு அலங்கார மீன் விற்பனை நிலையங்களில் இந்தச் சோதனை நடவடிக்கை தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார். இந்த சோதனையின்போது, அரபைமா (arapaima), ஸ்டர்ஜன் (Sturgeon), பீகாக் பாஸ் (peacock bass) உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட மீன் வகைகள் உட்பட மொத்தம் 675 மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 35,674 ரிங்கிட் ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட அரபைமா மீன் ஒன்றின் விலை 300 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. வேகமாக வளரும் இனமான அரபைமா, பொதுவாக நாட்டின் பொழுதுபோக்கு நீர்நிலைகளில் காணப்படுவதால், உள்ளூர் நீர்வாழ் சூழலுக்கு அச்சுறுத்தலாக அமையும் என அஞ்சப்படுகிறது.
சோதனைக்குட்படுத்தப்பட்ட ஆறு கடைகளும் மீன் வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அனுமதி மற்றும் உரிமம் பெறாமல் இயங்கி வந்ததும் கண்டறியப்பட்டதாக சுஹானா குறிப்பிட்டார்.
மலேசிய மீன்வளத் துறை, புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை, வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (பெர்ஹிலிட்டான்) ஆகியவை இணைந்து இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டன.






