ஷா ஆலாம், செப்.26 – கோலா பிலாவில் உள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் படிவ மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 14 வயது மாணவர், ஆறு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நான்காம் படிவத்தைச் சேர்ந்த அந்த மாணவரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான உத்தரவு சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
அந்த மாணவரை நீதிமன்றம் ஆறு நாட்களுக்கு, அதாவது அக்டோபர் 1ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைக்க அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக, இரண்டாம் படிவ மாணவர் ஒருவர் பள்ளி விடுதியில் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் உடனடியாக துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனைக்குக் (HTAN) கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இறந்த மாணவர் பகடிவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மரணம் தொடர்பான விசாரணை குற்றவியல் சட்டம் பிரிவு 302இன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.






