நகோயா, செப் 25 - 2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாரம்பரிய எதிரியான தாய்லாந்தை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி, 36 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு மலேசிய ஆடவர் செபாக் தக்ராவ்(Sepak Takraw) அணி, குழு ரெகு (Team Regu) பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றது.
இந்த வெற்றியின் மூலம், கடந்த 1990 பெய்ஜிங் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இறுதிப் போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தி தங்கம் வென்ற சாதனையை மலேசியா மீண்டும் நிகழ்த்தியுள்ளது.
முதல் புள்ளியைப் பெறுவதற்காக முகம்மது சாகிர் முகமது ரோஸ்டி, ஃபர்ஹான் ஆடம் மற்றும் முகமது அஸ்லான் அலியாஸ் அடங்கிய மலேசியக் கூட்டணி, தாய்லாந்தின் மாருகின் ஃபன்மகான், புதவான் சோபா மற்றும் போர்ன்தெப் டிங்பங்போன் ஜோடியை 15-9, 5-15, 15-11 என்ற கணக்கில் வீழ்த்தி சிறப்பான தொடக்கத்தை அளித்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய முகம்மது சுல்கிப்லி அப்துல் ரசாக், ஐடில் ஐமான் அஸ்வாவி மற்றும் முகம்மட் அஃபிபுடின் ரசாலி ஆகியோர் அடங்கிய இரண்டாவது ரெகு அணி, தாய்லாந்தின் கிரித்சனபோங் நோந்தகோதே, தனாபோன் சப்யென் மற்றும் உத்தினு கம்சானோர் ஜோடியை நேர் செட்களில் 15-13, 15-10 என்ற கணக்கில் வீழ்த்தி அணியின் தங்கப் பதக்க வெற்றியை உறுதி செய்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 2025 தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தியதைத் தொடர்ந்து, தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக மலேசியா அவர்களை வீழ்த்தியுள்ளது.
செப்பாக் தக்ராவ் போட்டியின் மூலம் கிடைத்த இந்த தங்கப் பதக்கத்துடன், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியா இதுவரை நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.







