கோலாலம்பூர், செப் 25 - வாட்ஸ்அப் (WhatsApp) கணக்குகள் முடக்கம்,ஹேக் செய்யப்பட்டது அல்லது அணுக முடியாமல் போனது போன்ற பொதுமக்களின் புகார்கள் குறித்து மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC), தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
MCMC இந்த விவகாரம் குறித்து மெட்டா (Meta) நிறுவனத்திடம் விளக்கம் மற்றும் தகுந்த நடவடிக்கை கோரியுள்ளதாக, இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அவ்வாணையம் அறிவித்தது.
“MCMC தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து, பயனர்களின் நலன்களைப் பாதுகாக்க தளத்தின் ஒத்துழைப்பைப் பெறும்.
பாதிக்கப்பட்ட பயனர்கள் தங்களது கணக்கை மீட்டெடுக்க அல்லது சரிபார்க்க அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனல்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கணக்கு ஹேக் செய்யப்படுவதும் (compromised) மற்றும் கணக்கு முடக்கப்படுவதும் (blocked) இரு வெவ்வேறு பிரச்சனைகள் ஆகும்.
“பொறுப்பற்ற தரப்பினரால் ஹேக் செய்யப்படும் கணக்குகள், மோசடி, ஸ்பேம் அல்லது வாட்ஸ்அப்பின் விதிமுறைகளை மீறும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம், அதன் விளைவாக அந்த கணக்கு தளத்தால் முடக்கப்படலாம்,” என்று MCMC தெரிவித்தது.
மேலும், பொதுமக்கள் தங்களின் சரிபார்ப்புக் குறியீடுகள் (verification codes) அல்லது பாதுகாப்பு பின் (PIN) எண்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், 'Two-Step Verification' (இருபடி சரிபார்ப்பு) அம்சத்தை செயல்படுத்துமாறும், சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது செயலிகளைத் தவிர்க்குமாறும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பணம், தனிப்பட்ட தகவல்கள் அல்லது சரிபார்ப்புக் குறியீடுகளைக் கேட்கும் கணக்கு மீட்புச் சேவைகளை வழங்கும் தரப்பினரிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு MCMC நினைவூட்டியது.
“அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனல்கள் மூலம் சிக்கலைத் தீர்க்க முடியாவிட்டால், பயனர்கள் மேலதிக நடவடிக்கைக்காக MCMC-இடம் புகார் சமர்ப்பிக்கலாம், மேலும் அந்தப் புகார் மெட்டா நிறுவனத்திற்குப் பரிந்துரைக்கப்படும்,” என்று ஆணையம் மேலும் தெரிவித்தது.





