மும்பை, ஜூன் 25 - மெத்தா( Meta ) நிறுவனம், வட்சாப்பின் (WhatsApp) புதிய தலைவராக இந்தியாவின் ஃபின்டெக்-நிதி தொழில்நுட்ப நிறுவனத் தோற்றுநர் குணால் ஷாவை நியமித்திருக்கிறது.
அவரது நியமனத்தை அறிக்கையின் வாயிலாக அறிவித்த மெத்தா தலைவர் மார்க் சுக்கர்பெர்க், குணாலின் CRED - வாடிக்கையாளர் நிதி நிறுவனத்தில் மெத்தா, 900 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யவிருப்பதையும் அறிவித்தார்.
பிரபல தொழில்முனைவரும் இந்தியாவின் ஃபின்டெக் தொழில்நுட்ப உலகில் அதிக செல்வாக்கு கொண்டவருமான குணால், 2018-இல்
CRED நிறுவனத்தை உருவாக்கினார். கடன்பற்று அட்டைக்கான தவணையை முறையாக செலுத்துபவர்களுக்கு வெகுமதியை வழங்கும் முறையை அவரது நிறுவனம் தொடக்கத்தில் மேம்படுத்தியிருந்தது.
கடந்த சில ஆண்டுகளில், விரைந்து அதன் 17 மில்லியன் பயனர்களுக்கு நிதி நிர்வாகம், காப்பீடு, கடனுதவி ஆகிய சேவைகளை விரிவுப்படுத்தியது.
அரை கோடிக்கும் அதிகமான பயனர்களுடன் வட்சாப்-பின் மிகப் பெரிய சந்தை வாய்ப்பினை இந்தியா கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில் குணாலின் திறமையைக் கொண்டு, வட்சாப் அதன் தகவலை அனுப்பும் வழக்கமான சேவையிலிருந்து, பணம் செலுத்துவது, வர்த்தக சேவைகளுடன் AI செயற்கை நுண்ணறிவைப் புகுத்திய சேவைகளைப் புதிதாக அறிமுகப்படுத்துவது என தனது வருவாய் வாய்ப்புகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.







