இணையத்தில் சிறார் பாலியல் சுரண்டல் : MCMC போலிசுடன் ஒத்துழைப்பு

24 செப்டெம்பர் 2026, 8:28 AM
இணையத்தில் சிறார் பாலியல் சுரண்டல் : MCMC போலிசுடன் ஒத்துழைப்பு

புத்ராஜெயா, செப் 24 - சிறார் பாலியல் சுரண்டல்களைத் தடுக்க , மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையத்திற்கும் ( MCMC) அரச மலேசிய போலீஸ் படைக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.

இணைய சேவைத் தளங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவதில், ஒரு தொழில்நுட்ப அமைப்பாக தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் தொடர்ந்து போலீசாருக்கு, குறிப்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் D11 பிரிவுக்கு (பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றப் புலனாய்வுப் பிரிவு) முக்கியப் பங்காற்றி உதவி வருமென தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இன்று இங்கு தகவல் தொடர்பு அமைச்சின் 'ஜசாமு டிகேனாங்' (Jasamu Dikenang) பாராட்டு விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் இதனைக் கூறினார்.

சிறார்களுக்கு எதிரான இணையப் பாலியல் சுரண்டல் நடவடிக்கைகள் குறித்து அரச மலேசிய போலீஸ் படை மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு உதவும் வகையில், தொழில்நுட்பம் மற்றும் தடயவியல் சார்ந்த அம்சங்களும் இந்த ஒத்துழைப்பில் அடங்கும் என்று ஃபஹ்மி தெரிவித்தார்.

அண்மையில் நடத்தப்பட்ட 'ஒப்ஸ் பெடோ' கூட்டு நடவடிக்கை மூலம், சிறார் பாலியல் அத்துமீறல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 53 நபர்களில், 13 வயதுடைய ஒரு சிறுவன் உட்பட 8 பதின்ம வயதினரும் கைது செய்யப்பட்டதாக கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்திருந்தார்.

மேலும், அந்த அதிரடி சோதனையில், இணைய ரகசிய குழுக்கள் (closed groups) மூலம் ஆபாச - சிறார் பாலியல் தொடர்பான வீடியோக்கள் மற்றும் அனிமேஷன்களை உருவாக்குவது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளைப் போலீசார் கண்டறிந்தனர்.

அந்த உள்ளடக்கங்கள் 50 ரிங்கிட் முதல் 60 ரிங்கிட் வரையில் விற்கப்பட்டதும் தெரியவந்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.