புத்ராஜெயா, செப் 19 - மலாய் ஆட்சியாளர் அமைப்பையும் தேசியக் கோட்பாடையும் அவமதிக்கும் வகையில் அமைந்த ஒரு மேடை நிகழ்ச்சியின் வைரலான வீடியோவுடன் தொடர்புடைய பல சமூக ஊடக கணக்குகள் மற்றும் நபர்களை மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC) அடையாளம் கண்டுள்ளது.
அந்த வைரலான காணொளி 2018-ஆம் ஆண்டு நடந்த ஒரு மேடை நிகழ்ச்சியிலிருந்து எடுக்கப்பட்டது என்றும், தற்போது அது மீண்டும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
"இந்த விசாரணையை நிறைவு செய்வதற்காக அரச மலேசிய போலீஸ் படையின் குற்றப் புலனாய்வுத் துறையுடன் இணைந்து எம்சிஎம்சி செயல்பட்டு வருகிறது," என்று அவ்வாணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
விசாரணைக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, இந்த வீடியோவுடன் தொடர்புடைய நபர்களைப் பற்றி வதந்திகளைப் பரப்புவதையோ அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதையோ தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங், இந்த மேடை நிகழ்ச்சி வீடியோ குறித்து போலிசும் எம்சிஎம்சியும் உடனடியாகவும் முழுமையாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஏதேனும் சட்டங்கள் மீறப்பட்டிருந்தால், அனைத்து சட்ட விதிகளையும் கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.







