கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இணையப் பகடிவதையை அனுமதிக்க முடியாது – MCMC எச்சரிக்கை

19 அக்டோபர் 2026, 5:30 AM
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இணையப் பகடிவதையை அனுமதிக்க முடியாது – MCMC எச்சரிக்கை

புத்ராஜெயா, அக். 19 – கருத்துச் சுதந்திரமும் விமர்சிக்கும் உரிமையும் நாகரிகத்துடனும் பொறுப்புணர்வுடனும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அவற்றை இணையவழி பகடிவதையில் ஈடுபடுவதற்கான காரணமாகப் பயன்படுத்தக் கூடாது என மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் (MCMC) வலியுறுத்தியுள்ளது.

ஒருவரின் கருத்துடன் மாறுபடும் போது அவரைத் துன்புறுத்துவது, மிரட்டுவது, அவமதிப்பது, தனிப்பட்ட முறையில் தாக்குவது அல்லது அவரது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு பாதுகாப்புக்கும் கண்ணியத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவது போன்ற செயல்களுக்கு வழிவகுக்கக் கூடாது என ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கருத்துச் சுதந்திரத்தையும் பரஸ்பர மரியாதையையும் மதிக்கும் சமூகத்தில் இத்தகைய செயல்கள் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது என்றும் MCMC சுட்டிக்காட்டியுள்ளது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது சுதந்திரத்துடன் பொறுப்பும் இணைந்துள்ளது என வலியுறுத்திய மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அறிவுரையைத் தமது ஆணையம் மதிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு போலியான உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுவதும், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுவதும் அவதூறுகளுக்கும் வெறுப்புணர்வுக்கும் வழிவகுக்கக்கூடும் என மாமன்னர் கவலை தெரிவித்திருப்பதையும் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது.

இதற்கிடையில், இணையவழிப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான தனது முயற்சிகளைத் தொடர்ந்து வலுப்படுத்தவுள்ளதாக MCMC தெரிவித்தது. இதற்காக இணையத் தளங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

அதேவேளையில், சட்டத்தை மீறியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இணைய உள்ளடக்கங்கள் உரிய முறையில் ஆராயப்பட்டு, நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கு ஏற்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆணையம் உறுதியளித்துள்ளது.

இந்நிலையில், மாமன்னரின் அறிவுரையைப் பொதுமக்கள் கடைப்பிடித்து, மாறுபட்ட கருத்துகளை மதிக்க வேண்டும் என்றும், இணையத்தில் எந்தவொரு தகவலையும் பகிர்வதற்கு முன்பு அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும் என்றும் MCMC கேட்டுக்கொண்டது.

மேலும், இணையத் தளங்களில் நாகரிகத்தைக் கடைப்பிடிப்பதுடன், பிறரின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதுகாப்பதில் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.