நகோயா , செப் 22 - முதல் முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற பெருமிதம். அந்தப் பெருமிதத்தொடு நாட்டிற்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பரிசளித்திருக்கிறார் நாட்டின் கராத்தே வீராங்கனை அடியோலா ஃபய் ரோபர்ட்.
2026 அய்ச்சி நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியில், 20 வயதான, சபாவைச் சேர்ந்த அந்த வீராங்கனை, 55 கிலோகிராமுக்கு கீழ்பட்ட குமித்தே பிரிவின் மூலம் அப்பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
முன்னதாக அரையிறுதியில், அடியோலா கசக்ஸ்தானின் பெல்லா சமாஷேவா-வை 5-4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதியாட்டத்தில் நுழைந்தார்.
மகளிருக்கான அந்த இறுதியாட்டத்தில் அவர், உற்சாகம் மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்தி ஈரானின் ஃபத்தேமெஹ்சாரா சய்டபாடியை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.
அடியோலா , 2025 பங்காங் சீ விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
அதோடு, அவர் மகளிர் கராத்தே பிரிவில் நீண்ட காலமாக பதக்கத்துக்காக காத்திருந்த மலேசியாவின் ஏக்கத்தையும் தணியச் செய்தார். அப்பிரிவில் மலேசியா ஆகக் கடைசியாக தென் கொரியா, இன்ஞியோனில் நடைபெற்ற 2014 ஆசியப் போட்டியில், ஷகிலா சால்னி வாயிலாக வெற்றியைப் பதிவுச் செய்தது.








