கோலாலம்பூர், செப். 23 — நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளர் (SUK) மற்றும் சட்ட ஆலோசகரை பணி இடைநீக்கம் செய்வதற்கான சட்ட அதிகாரம் மாநில ஆட்சிக் குழுவுக்கு இல்லை என சட்டத்துறைத் தலைமை அலுவலகம் (AGC) தெரிவித்துள்ளது.
நெகிரி செம்பிலான் அரசியலமைப்பின் 1959ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 37-இன் கீழ், இந்த இரு பதவிகளுக்கான நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் பொதுச் சேவை ஆணையம், நீதித்துறை மற்றும் சட்ட சேவை ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வருவதாகத் AGC அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது.
செப்டம்பர் 22ஆம் தேதி 2026 நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் வெளியிட்ட ஊடக அறிக்கையில், மாநிலச் செயலாளர் மற்றும் மாநில சட்ட ஆலோசகரை உடனடியாக இடைநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த AGC, அவ்வாறு இரு அதிகாரிகளையும் இடைநீக்கம் செய்வதற்கு நெகிரி செம்பிலான் மாநில நிர்வாகக் குழுவுக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்ற நிலைப்பாட்டைத் தெளிவுப்படுத்தியது.
மேலும், புதிய மாநில சட்ட ஆலோசகரை நியமிக்கும் நடவடிக்கையும் மாநில அரசியலமைப்பின் 1959ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 37-க்கு இணங்க மேற்கொள்ளப்பட வேண்டும் என AGC குறிப்பிட்டுள்ளது.







