ஷா ஆலாம், அக். 19 – உரிய வணிக உரிமம் இன்றி செயல்பட்டு வந்த வெளிநாட்டவர்களால் நடத்தப்படும் மளிகைக் கடைக்கு எதிராக, சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம் (MBSJ) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட கடையிலிருந்த வணிகப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடையை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செரி கெம்பாங்கான், தாமான் பிங்கிரான் புத்ரா பகுதியில் அமைந்துள்ள அந்தக் கடையில் சந்தேகத்திற்கிடமான வணிக நடவடிக்கைகள் நடைபெறுவதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக MBSJ தெரிவித்தது.

சோதனையில் செல்லுபடியாகும் வணிக உரிமம் இன்றி அக்கடை செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டதாக MBSJ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
இதையடுத்து, நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப உடனடி அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், தனது நிர்வாக எல்லைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகளும் ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என MBSJ உறுதியளித்தது.
வணிக உரிமம் தொடர்பான விதிமுறைகளை மீறும் வெளிநாட்டு வணிகர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இத்தகைய சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் மாநகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.







