தொக்யோ, செப் 20 : அய்ச்சி-நகாயா (Aichi-Nagoya) ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான குமித்தே (kumite) பிரிவில் கே.தேவேந்திரனுடன், எச். சூர்யா சங்கரும் வெண்கலப் பதக்கம் வென்று மலேசியாவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளனர்.
இதன் மூலம் நாட்டின் பதக்க எண்ணிக்கை கணக்குத் தொடங்கியுள்ளது.
60 கிலோவிற்கும் குறைவான எடைப் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் கத்தாரின் அப்தெல்ரஹ்மான் அப்தெல்ஹமீதிடம் தோல்வியடைந்த ஏமாற்றத்திலிருந்து மீண்ட சூர்யா, வியட்நாமின் சூ வான்ரிக்கை 10-2 என்ற கணக்கில் வீழ்த்தி மலேசியாவிற்கு இரண்டாவது வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
இரு முறை சீ விளையாட்டுப் போட்டியின் வெற்றியாளரான அவர், தனது முதல் சுற்றில் வங்காளதேசத்தின் சியாம் ஹோசனை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ராயன் குர்பன்மிராடோவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
முன்னதாக, மலேசியாவின் மற்றுமொரு கராத்தே வீரரான கே.தேவேந்திரன் ஆண்களுக்கான 55 கிலோவிற்கும் குறைவான எடைப் பிரிவில் (repechage சுற்று வழியாக) வெண்கலப் பதக்கம் வென்று மலேசியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.
அய்ச்சியில் உள்ள தொயோஹாஷி (Toyohashi) உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்ற இந்த மறுவாய்ப்பு (repechage) சுற்றில், தேவேந்திரன் நேபாளத்தின் ராகேஷ் மனந்தாரை 9-1 என்ற கணக்கில் வீழ்த்தி தனது வெண்கலப் பதக்கத்தை உறுதிச் செய்தார்.
முன்னதாக நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் காலிமோவ் குமோயுன்மிர்சோவிடம் (Khalimov Khumoyunmirzo) தோல்வியடைந்த மலேசிய வீரரான தேவேந்திரன், அதன் பின்னரே இந்த மறுவாய்ப்புச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.










