
ஷா ஆலாம், 21 ஆகஸ்ட்: இன்று நடைபெற்ற சுக்மா போட்டியின் பெண்களுக்கான 50 கிலோகிராம் தனிநபர் குமித்தே பிரிவில் சிலாங்கூரின் கராத்தே வீராங்கனை என்.ஹரேதஷ்னி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
ஐடியல் மாநாட்டு மையத்தில் (IDCC) களம் கண்ட ஹரேதாஷ்னி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தனது எதிராட்டக்காரரை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

ஆரம்பத்தில் தங்கப் பதக்கத்தை இலக்காகக் கொண்டிருந்த ஹரேதாஷ்னி, அரையிறுதியில் ஒரு கடினமான எதிரியிடம் தோற்றதால் சற்று ஏமாற்றமடைந்ததை ஒப்புக்கொண்டார்.
"எனது முக்கிய இலக்கு தங்கம் தான், ஆனால் அரையிறுதியில் நான் மிகவும் கடினமான எதிராட்டக்காரரை எதிர்கொண்டேன். இருப்பினும், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் நான் மீண்டு வந்து, சிலாங்கூர் மாநிலத்திற்காக ஒரு பதக்கத்தை பங்களிக்க முடிந்தது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
இந்த வெண்கலப் பதக்கம், சுக்மா 2026-இல் கராத்தே போட்டி தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே சிலாங்கூர் கராத்தே அணி பெற்ற முதல் பதக்கமாகும்.
சுக்மாவில் களமிறங்குவது ஹரேதாஷ்னிக்கு இதுவே இறுதியாகும்.
இருப்பினும், அவரது போராட்டம் இன்னும் முடிவடையவில்லை; வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள குழு குமித்தே போட்டியில் அவர் பங்கேற்க உள்ளார்.
அதே வேளையில், இந்த போட்டிக்காக தனக்கு ஆதரவளித்த பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்களுக்கு ஹரேதாஷ்னி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.







