ஷா ஆலாம், செப். 22 — பத்து தீகா தொகுதியில் சிலாங்கூர் பட்ஜெட் 2027இல் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அதன் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷிட் ஹாரோன் தெரிவித்தார்.
புதிய மேம்பாடுகளுக்கான நிலம் குறைந்து, அப்பகுதி ஏற்கெனவே அதிகளவில் வளர்ச்சியடைந்துள்ளதால் அவர் இதனை குறிப்பிட்டார்.
புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, ஏற்கெனவே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள், சூராவ் மற்றும் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஷா ஆலாம் நகரின் ஆரம்பகால வளர்ச்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த வசதிகளில் பல தற்போது பழையதாகிவிட்டன. அவற்றுக்கு தொடர்ந்து பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
மீடியா சிலாங்கூரின் ‘ஸ்கோப் சிலாங்கூர் பட்ஜெட் 2027’ நிகழ்ச்சிக்கான அண்மைய நேர்காணலில் டேனியல் இதனைத் தெரிவித்தார்.
நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதால் அனைத்து மேம்பாட்டுப் பணிகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்வது சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 10 சிறிய அளவிலான திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு விண்ணப்பமும் மதிப்பீடு செய்யப்பட்டு, சாத்தியமான அளவுக்கு அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.







