ஜகார்த்தா, செப் 19 - தளவாடங்களையும் நிபுணத்துவத்தையும் வழங்கி காட்டுத் தீயை அணைக்க மலேசியா நீட்டியிருக்கும் உதவியை, இந்தோனேசியா ஏற்றுக் கொண்டுள்ளது.
விமானம், 3 ஹெலிகாப்டர்கள், தீயணைப்புக் குழுவினர் ஆகிய உதவிகளை இந்தோனேசியா ஏற்பதாக அந்நாட்டு அதிபர் பிரபொவோ சுபியந்தோ தெரிவித்தார்.
நேற்று ( வெள்ளிக்கிழமை) போகோர் , ஹம்பாலாங்கில் உள்ள அதிபர் இல்லத்தில், துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிட்டிடமிருந்து அழைப்பை பெற்றப் பின்னர் , பிரபொவோ இதனைத் தெரிவித்தார்.
" இதுவொரு பல்வேறு தரப்புகளைப் பாதித்திருக்கும் சுற்றுச் சூழல் பிரச்சனையாகும். தீ இந்தோனேசியாவில் ஏற்பட்டிருந்தாலும், அதன் பாதிப்பை நமது அண்டை நாடுகளும் உணந்துள்ளன." என பிரபொவோ பேசி வெளியிட்டிருக்கும் காணொளியை, இந்தோனேசிய அதிபர் செயலகம் அதன் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
அதனை இன்று அஹ்மாட் சாஹிடி பகிர்ந்துக் கொண்டார்.
இதனிடையே, கலிமந்தானில் நீடிக்கும் காட்டுத் தீயை அணைக்க ஜப்பான் உட்பட சில நாடுகளின் உதவியைப் பெற்றிருப்பதாகவும் பிரபொவோ கூறினார்.
ஜகார்த்தாவிற்கு 4 நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள அஹ்மாட் சாஹிடி, மலேசியாவின் உதவி குறித்து துணையதிபர் ஜிப்ரான் ராகாபுமிங் ராகா-விடம் தெரிவித்திருந்தார்.
மலேசியா, பொம்பார்டியர் CL-415MP விமானம், 3 ஹெலிகாப்டர்கள், ( NADMA) நட்மா-தேசியப் பேரிடர் நிர்வாக மையம், மலேசிய கடற்படை அமலாக்க அமைப்பு (MMEA), அரச மலேசிய வான் படை(RMAF) ஆகியவற்றின் 52 அதிகாரிகளை அனுப்ப தயாராகவுள்ளது.







