ஷா ஆலம், 19 செப்: காற்றில் உள்ள நுண்ணிய மாசு துகள்களை வடிகட்டும் வகையில் சாதாரண முகக்கவசங்கள் வடிவமைக்கப்படவில்லை;
எனவே புகை மூட்டத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் பயன்படுத்திய சாதாரண முகக்கவசங்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாறாக, புகை மூட்டத்தின் போது, குறிப்பாக பள்ளிச் செல்லும் குழந்தைகள் மற்றும் வெளியில் அடிக்கடி நடமாடும் நபர்களுக்கு, N95 ரக முகக்கவசங்களே மிகவும் பொருத்தமானவை என சிலாங்கூர் மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் உம்மி கல்தோம் ஷம்சுடின் தெரிவித்தார்.

"ஏன் இந்த வகையான முகக்கவசம் தேவை? ஏனெனில், கோவிட்-19 பெருந்தொற்றின் போது முதன்மையாகக் கவனிக்கப்பட்ட சுவாசத் துளிகளை விட புகைமூட்டத் துகள்கள் மிகவும் நுண்ணியவை.
எனவே, அதிக வடிகட்டும் திறன் கொண்ட பாதுகாப்பு நமக்குத் தேவைப்படுகிறது.மேலும், நாம் சுவாசிக்கும் காற்று வடிகட்டி வழியாக மட்டுமே செல்வதையும், முகத்தைச் சுற்றியுள்ள இடைவெளிகள் வழியே புகாமல் இருப்பதையும் உறுதி செய்ய, N95 முகக்கவசத்தை இடைவெளியின்றி கச்சிதமாக அணிய வேண்டும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
புகை மூட்டத்தின் போது பெய்யும் மழையை ஒரு வாய்ப்பாகக் கருதி, வெளியில் விளையாடவோ அல்லது வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம் என்றும் பொதுமக்களை டாக்டர் உம்மி வலியுறுத்தினார்.
புகை மூட்டத்தின் போது பெய்யும் மழை, காற்றில் உள்ள துகள்கள் மற்றும் மாசுக்களை தன்னோடு சேர்த்துக்கொண்டு வருவதால், பொதுமக்கள் தொடர்ந்து கட்டிடங்களுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
"புகைமூட்டக் காலத்தில் மழையில் விளையாட வேண்டாம். மழை பெய்வதால் காற்று உடனடியாக சுத்தமாகிவிடும் என்று நாம் மகிழ்ச்சியடையலாம், ஆனால் அந்த நேரத்தில் காற்றில் மிதக்கும் பல்வேறு துகள்கள் மழைநீருடன் சேர்ந்து வரக்கூடும்.எனவே, வீட்டிற்குள்ளேயே இருங்கள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்.
புகை மூட்டம் நிலவும் போது வடிகால்களை சுத்தம் செய்வதிலோ வெளியில் வேலை செய்வதிலோ மும்முரமாக ஈடுபட வேண்டாம்," என்று அவர் மேலும் கூறினார்.
அதே வேளையில், புகைமூட்டம் நிலவும் காலம் முழுவதும் வெளியில் உடற்பயிற்சி செய்வது போன்ற உடல் ரீதியான செயல்பாடுகளைத் தவிர்க்கவும், குழந்தைகளை பூங்காக்கள் அல்லது திறந்தவெளிப் பகுதிகளுக்கு விளையாட அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

"உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுப்பதோடு, தொண்டை வலி போன்ற அசௌகரியங்களைக் குறைக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம்.
நெடுநேரம் வெளியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள், வீட்டிற்குத் திரும்பியதும் சருமத்தில் ஒட்டியிருக்கும் தூசிகள் மற்றும் மாசுக்களை அகற்ற முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும்," என்று அவர் கூறினார்.







