சிலாங்கூர் புகை மூட்டம்: கண் அழற்சி 81 விழுக்காடும், ஆஸ்துமா 39.6 விழுக்காடும் உயர்வு

18 செப்டெம்பர் 2026, 4:33 PM
சிலாங்கூர் புகை மூட்டம்: கண் அழற்சி  81 விழுக்காடும், ஆஸ்துமா 39.6 விழுக்காடும் உயர்வு

ஷா ஆலாம், செப் 19: சிலாங்கூரில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால், புகை மூட்டம் தொடர்பான உடல் நலப் பாதிப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதில் கண் அழற்சி (Conjunctivitis) 81 விழுக்காடும், ஆஸ்துமா (Asthma) பாதிப்பு 39.6 விழுக்காடும் உயர்ந்துள்ளன.

ME22 தொற்றுநோயியல் வாரத்துடன் (Epidemiological Week) ஒப்பிடும்போது, ME33 வாரத்தில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும், அதே வேளையில் மேல் சுவாசப்பாதை தொற்று (URTI) பாதிப்புகளும் 7.3 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் உம்மி கல்தோம் ஷம்சுதின் தெரிவித்தார்.

"ஷா ஆலாம் செக்ஷன் 7 கிளினிக், கோத்தா தமன்காரோ கிளினிக், பண்டமாரான் கிளினிக், தெலோக் டத்தோ கிளினிக் மற்றும் கோலா சிலாங்கூர் கிளினிக் ஆகிய ஐந்து கண்காணிப்பு சுகாதார கிளினிக்குகள் மூலம் இந்தத் தரவுகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன.

ஆஸ்துமா பாதிப்புகளைக் கண்காணிப்பதற்கான முதன்மை மருத்துவமனையாக ஷா ஆலாம் மருத்துவமனை செயல்படுகிறது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

புகைமூட்டம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, இதற்கு முன்பு மாதந்தோறும் நடத்தப்பட்ட கண்காணிப்பு, தற்போது கட்டுப்பாட்டு அறையின் மூலம் தினசரி கண்காணிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அதே வேளையில், PM2.5 நுண்ணிய துகள்கள் சுவாச மண்டலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், இரத்த நாளங்களுக்குள்ளும் நுழையக்கூடும் என்பதால், இதய நோயாளிகள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு டாக்டர் உம்மி கல்தோம் நினைவூட்டினார்.

இந்த நுண்ணிய துகள்களின் தாக்கம் உடலில் அலற்சி (Inflammation) ஏற்படுவதற்கும், இரத்த நாளங்கள் கடினமடைந்து சுருங்குவதற்கும் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

"இந்த நிலைமை மாரடைப்பு (Heart attack) அல்லது பக்கவாதத்தை (Stroke) தூண்டக்கூடும். புகை மூட்ட விளைவுகள் வெறும் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதற்காக அதை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம். இது ஆஸ்துமா, கண் வலி அல்லது தொண்டை வலியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்," என்று அவர் கூறினார்.

PM2.5 துகள்கள் நுரையீரலின் இறுதிப் பகுதி வரை ஊடுருவக்கூடியவை என்றும், அவை இரத்த நாளங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்றும், அதனால்தான் இதன் விளைவுகள் சுவாச மண்டலத்தோடு மட்டும் நின்றுவிடுவதில்லை என்றும் அவர் விளக்கினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.