பெட்டாலிங் ஜெயா, செப்.18 — சிலாங்கூரில் இளைஞர்களுக்காக வழங்கப்பட்டு வரும் SEHAT Youth Line எனப்படும் உதவி அழைப்பு சேவைக்கு, எட்டு மாதங்களில் 234 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன.
இதனை மாநில பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
இந்த அழைப்புகளில் பள்ளி மற்றும் சமூகச் சூழலில் எதிர்கொள்ளப்படும் பகடிவதை முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

இதனுடன் கல்வி, குடும்பம் மற்றும் காதல் அல்லது தனிப்பட்ட உறவுகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் இளைஞர்கள் ஆலோசனைகளை நாடியுள்ளதாக ஜமாலியா தெரிவித்தார்.
இளைஞர்களிடமிருந்து கிடைத்துள்ள இந்த அழைப்புகளின் எண்ணிக்கை, ரகசியத்தன்மை கொண்ட தனிப்பட்ட உதவி மையம் இளைஞர்களுக்கு எவ்வளவு அவசியமானது என்பதை எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சேவையின் முக்கிய இலக்கு 13 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களாகும். இந்தச் சேவை சிலாங்கூர் ஆலோசனை மையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆலோசகர்களால் நிர்வகிக்கப்படுகிறது என அவர் கூறினார்.

பெரியவர்களும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஒரே மாதிரியானவை அல்ல என்பதால், இளைய தலைமுறையினருக்கு அவர்களின் வயதுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற ஆதரவு அவசியம் என ஜமாலியா சுட்டிக்காட்டினார்.
SEHAT Youth Line சேவைக்கு தவிர்த்து சிலாங்கூர் மாநிலத்தில் Support Friends Hub மூலமாகவும் இலவசமான மற்றும் ரகசியத்தன்மை கொண்ட உளவியல் மற்றும் சமூக ஆதரவு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இரண்டு சேவைகளும் பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும்.







