இளையோர் சமூகத்தை மேம்படுத்த RS-2 திட்டத்தில் புதிய அணுகுமுறைகள் அறிமுகம்

15 ஜூன் 2026, 2:00 AM
இளையோர் சமூகத்தை மேம்படுத்த RS-2 திட்டத்தில் புதிய அணுகுமுறைகள் அறிமுகம்

கோலா லங்காட், ஜூன் 15 – தற்போதைய காலக்கட்டத்தின் தேவைக்கேற்ப இளையோர் சமுதாயத்தைத் தொடர்ந்து அரவணைத்து, அவர்களின் திறன்களை மேம்படுத்துவதை உறுதி செய்வதற்காக, இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-2) மூலம் மாநில அரசு பல்வேறு புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

இது குறித்துப் பேசிய சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் நல்வாழ்வுத்துறை மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி, தற்காலத்து இளைஞர்கள் மிகவும் நெகிழ்வுத்தன்மை (Flexible) கொண்டவர்களாக விளங்குவதால், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தங்களின் திட்டங்களை மிகவும் சுறுசுறுப்பான மற்றும் புதிய மாற்றங்களுடன் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.

அந்த வகையில், தற்போது இளைஞர்களின் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாறிவிட்ட மின்னணு விளையாட்டு எனப்படும் இ-ஸ்போர்ட்ஸ் (E-Sukan), பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் தன்னார்வத் தொண்டூழியம் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய புதிய திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருவதாக அவர் விவரித்தார்.

தற்கால இளையோர் சமுதாயம் முந்தைய தலைமுறையினரிடமிருந்து வேறுபட்டு விளங்குவதைச் சுட்டிக்காட்டிய நஜ்வான், தாங்கள் அணுக நினைக்கும் இளைஞர்கள் ஏதேனும் ஒரு சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமல்ல என்றும், எந்தவொரு சங்கத்திலும் இல்லாத பிற இளைஞர்களையும் சென்றடைவதற்கான புதிய உத்திகளைத் தங்களின் குழுவினர் ஆராய வேண்டும் என்றும் கூறினார்.

வெளியுலகில் இருக்கும் இந்த இளையோர் மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டவர்களாகவும், தங்களின் அன்றாடச் செயல்பாடுகளுக்கு எனச் சொந்தமாகப் புதிய அணுகுமுறைகளையும் கையாளுபவர்களாகவும் திகழ்கிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.

பந்திங்கில் உள்ள சிலாங்கூர் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான 2026ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில விளையாட்டுப் பேரவையின் (MSN) நிர்வாக இயக்குநர் முகமட் நிஜாம் மர்ஜுகி மற்றும் சிலாங்கூர் மாநில இளைஞர் மன்றத் தலைவர் டத்தோ முகமட் இம்ரான் தாம்ரின் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அதே வேளையில், இந்த ஆண்டு சிலாங்கூர் மாநில அளவிலான தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டம், முதன்முறையாக ஓர் உயர்கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்டுப் புதியதொரு பரிமாணத்தைப் படைத்துள்ளது என்றும் நஜ்வான் ஹலிமி பெருமிதத்துடன் கூறினார்.

இந்தத் திட்டத்திற்கு அந்த நிறுவன மாணவர்களின் முழுமையான ஒத்துழைப்பும் பங்களிப்பும் கிடைத்ததால், இதன் ஒட்டுமொத்த அமலாக்கமும் மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் தான் அந்த மாணவர்களின் புதிய சேர்க்கை மற்றும் பதிவுப் பணிகள் நடைபெற்ற போதிலும், மாணவர்கள் பெரும் திரளாக வந்து இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்குக் காட்டிய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

46 மூலோபாயக் கூட்டாளிகளுடன் இணைந்து, 'இளைஞர்களை இயக்குவோம்' (Menggerak Belia) என்ற கருப்பொருளின் கீழ் இரண்டு நாட்களுக்குக் கோலாகலமாக நடைபெற்ற இந்த மாநில அளவிலான தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில், 29க்கும் மேற்பட்ட சுவாரசியமான நடவடிக்கைகள் பொதுமக்களுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.