பள்ளி மாணவர்களிடையே மனநல விழிப்புணர்வை ஏற்படுத்த 'பியர்ஸ்' (PeerZ) திட்டம் அறிமுகம்

18 ஜூன் 2026, 8:40 AM
பள்ளி மாணவர்களிடையே மனநல விழிப்புணர்வை ஏற்படுத்த 'பியர்ஸ்' (PeerZ) திட்டம் அறிமுகம்

ஷா ஆலம், ஜூன் 18: பள்ளி மாணவர்களிடையே மனநல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கான சிலாங்கூர் மாநில அரசின் தொடக்க முயற்சியாக, 'செஹாட்' (SEHAT) திட்டத்தின் கீழ் 'பியர்ஸ்' (PeerZ) எனும் புதிய விழிப்புணர்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பதின்ம வயது மாணவர்கள் தங்களின் மனநலப் பிரச்சனைகளைத் தாங்களே சுய பரிசோதனை செய்து கண்டறிந்து கொள்ள முடியும் என்றும், பள்ளிகளில் மாணவர்களுக்குப் பரஸ்பரம் ஆதரவளிக்கும் ஒரு சுமுகமான சூழலை உருவாக்க இது வழிவகுக்கும் என்றும் பொதுச் சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

பதின்ம வயது மாணவர்களுக்கான 'பியர்ஸ்' மனநல விழிப்புணர்வு முன்னோடித் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்துப் பேசிய அவர், 'பியர்ஸ்' என்பது வெறும் சொற்பொழிவுகளோடு நின்றுவிடாமல், மாணவர்கள் மனநலத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்கான ஒரு விழிப்புணர்வு இயக்கமாகச் செயல்படும் என்றார்.

அதோடு, மாணவர்கள் அவர்களிடையே திறம்படத் தொடர்புகொள்வதற்கும், உதவி தேவைப்படும் சக மாணவர்களுக்கு ஒரு சிறந்த ஆதரவு சக்தியாக விளங்குவதற்கும் இத்திட்டத்தின் மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பள்ளிகளில் மனநலப் பிரச்சனைகள் குறித்த தவறான பார்வைகளைக் களைந்து, ஒருவரையொருவர் குறைத்து மதிப்பிடாமல் பரஸ்பரம் ஆதரவளிக்கும் ஒரு பள்ளிச் சமூகக் கலாச்சாரத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெர்காமா இன்டர்நேஷனல் (PERKAMA International) மற்றும் எபிட் இடிசி கன்சல்டிங் (Epid ETC Consulting) உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் ஒத்துழைப்போடு இந்த உன்னத முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று ஜமாலியா கூறினார்.

மனநலம் என்பது மனிதநேயம், கல்வி மற்றும் நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றோடு தொடர்புடைய ஒன்று என்பதால், இதனை இனிமேலும் நாம் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.

மனநலப் பிரச்சனைகள் தீவிரமடைவதைத் தடுப்பதற்கும், மாணவர்கள் தங்களின் மனநலக் கோளாறுகளிலிருந்து விடுபட்டு, எவ்விதத் தயக்கமுமின்றி தைரியமாக உதவி தேடி முன்வருவதை உறுதி செய்வதற்கும் இத்தகைய ஆரம்பக்கட்ட அணுகுமுறைகள் மிகவும் அவசியமானவை என்றும் அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.