பெட்டாலிங் ஜெயா, செப்.18: சிலாங்கூரில் நிலவி வரும் புகைமூட்டத்தை எதிர்கொள்ள பள்ளி மாணவர்களுக்கு மறுபயன்பாட்டிற்கு உரிய முகக்கவசங்களை வழங்கும் திட்டம் குறித்து மாநில அரசு ஆய்வு செய்து வருகிறது.
சிலாங்கூர் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் இதனைத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் இதில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், முகக்கவசங்களை வழங்குவது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற முகக்கவசத்தின் வகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநில அரசு தற்போது தகவல்களைச் சேகரித்து வருவதாகவும் ஜமாலியா தெரிவித்தார்.
இதில், கழுவி மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி முகக்கவசங்களை வழங்குவது உள்ளிட்ட நீண்டகால அணுகுமுறைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசுக்குக் கிடைத்துள்ள தற்போதைய தகவல்களின் அடிப்படையில், அடுத்த சில நாட்களில் சிலாங்கூரின் IPU அளவு மேம்படும் என்றும், காற்றுத் தரம் மிதமான அல்லது நல்ல நிலையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ஜமாலியா தெரிவித்தார்.
இருப்பினும், சட்டவிரோத திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகள் மீண்டும் நிகழ்ந்தால், காற்றின் தரம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, புகைமூட்டம் மோசமடையும் சந்தர்ப்பங்களில் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜமாலியா வலியுறுத்தினார்.







