ஷா ஆலாம், செப்.16 — சிலாங்கூரில் இன்று காலை 11 மணி நிலவரப்படி ஐந்து பகுதிகளில் காற்று மாசு குறியீடு (API) அளவு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
அவற்றில் ஜோஹான் செத்தியா பகுதியில் API 187 - ஆக பதிவாகி, நாட்டில் அதிகபட்ச காற்று மாசு குறியீடு அளவாக அமைந்துள்ளது.
சிலாங்கூரில் ஷா ஆலாம் 175, பெட்டாலிங் ஜெயா 168, கிள்ளான் 166, பந்திங் 166 மற்றும் கோலா சிலாங்கூர் 164 என்ற API பதிவு செய்துள்ளன.
நாடு முழுவதும் காலை 10 மணி நிலவரப்படி 40 பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாகப் பதிவாகியுள்ளது. அப்பகுதிகளில் API அளவு 107 முதல் 187 வரை காணப்பட்டன.
காற்றுத் தரம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், நீண்ட நேரம் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உடல்நலக் குறைவு அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







