கோலாலம்பூர் மருத்துவமனை கழிவறைகள் குறித்த வைரல் காணொளி உண்மையல்ல; நிர்வாகம் விளக்கம்

1 ஆகஸ்ட் 2026, 9:04 AM
கோலாலம்பூர் மருத்துவமனை கழிவறைகள் குறித்த வைரல் காணொளி உண்மையல்ல; நிர்வாகம் விளக்கம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - கோலாலம்பூர் மருத்துவமனையின் (HKL) பொதுக் கழிவறைகள் அசுத்தமாகவும் முறையான பராமரிப்பு இன்றியும் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் காணொளித் தகவலை மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நேற்று முகநூல் பக்கத்தில் வைரலான அந்த காணொளித் தகவல் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கோலாலம்பூர் மருத்துவமனை இயக்குநர் டத்தோ டாக்டர் ஹரிகிருஷ்ணா கே.ஆர்.நாயர், மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அந்தப் புகாரைக் கவனத்தில் கொண்டு தீவிரமான விசாரணையை மேற்கொண்டதாக அறிக்கையில் தெரிவித்தார்.

கோலாலம்பூர் மருத்துவமனையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்துப் பொதுக் கழிவறைகளிலும் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், அந்த வைரல் காணொளியில் காட்டப்பட்டுள்ள கழிவறை கோலாலம்பூர் மருத்துவமனையின் மேற்பார்வையின் கீழ் எந்தப் பகுதியிலும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காணொளியில் இடம்பெற்றுள்ள கழிவறையின் வடிவமைப்பு கோலாலம்பூர் மருத்துவமனையில் உள்ள கழிவறைகளின் வடிவமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது என்பதன் அடிப்படையில் இந்த உண்மை கண்டறியப்பட்டது.

பொதுமக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்குவதில் தொடர்ச்சியாக ஈடுபாடு காட்டி வரும் கோலாலம்பூர் மருத்துவமனை ஊழியர்களின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில்தான் பொறுப்பற்ற முறையில் இந்தக் காணொளி பரப்பப்பட்டுள்ளதாக டத்தோ டாக்டர் ஹரிகிருஷ்ணா சுட்டிக்காட்டினார்.

நோயாளிகள், வருகையாளர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்களின் தூய்மை, பாதுகாப்பு மற்றும் வசதி ஆகியவற்றுக்கு கோலாலம்பூர் மருத்துவமனை எப்போதுமே முன்னுரிமை அளித்து வருவதாக அவர் வலியுறுத்தினார்.

எனவே, பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பொதுமக்கள் யாரும் பரப்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.